காரைக்குடி அருகே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பள்ளி குழந்தைகளுக்காக பனை ஓலை நிழற்கூரை அமைத்த கிராம மக்கள்

காரைக்குடி அருகே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பள்ளி குழந்தைகளுக்காக பனை ஓலை நிழற்கூரை அமைத்த கிராம மக்கள்
Updated on
1 min read

காரைக்குடி அருகே மழையில் நனையும் பள்ளி குழந்தைகளுக்காக நிழற்கூரை அமைக்க அதிகாரிகள் நடவடிக்க எடுக்காத நிலையில், கிராம மக்கள் இணைந்து பனைஓலையில் நிழற்கூரை அமைத்துள்ளனர்.

காரைக்குடி அருகேயுள்ள அறிகுறிஞ்சி கிராமத்தில் 80-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்கிராமத்தைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லலில் உள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர்.

அவர்கள் தினமும் 1 கி.மீ. நடந்து சென்று அறிகுறிஞ்சி விலக்கில் இருந்து கல்லலுக்கு பேருந்தில் செல்கின்றனர். பேருந்து பயணிகளுக்காக அறிகுறிஞ்சி விலக்கில் அமைக்கப்பட்டிருந்த நிழற்கூரை சேதமடைந்து மோசமான நிலையில் இருந்தது. இதையடுத்து சில மாதங்களுக்கு முன்பு அந்த நிழற்கூரை இடிக்கப்பட்டது.

தற்போது மழை பெய்து வருவதால், பேருந்துக்காக காத்திருக்கும் பள்ளி மாணவர்கள் நனையும் நிலை உள்ளது. நிழற்கூரை அமைக்கக்கோரி அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து கிராம மக்களே தங்களது குழந்தைகள் மழையில் நனையாமல் இருக்க ஓலைகூரையில் கொட்டகை அமைத்துள்ளனர்.

மேலும் அதற்கு திறப்பு விழாவும் நடத்தியுள்ளனர்.

இதுகுறித்து அறிகுறிச்சி கிராம மக்கள் கூறியதாவது: கடந்த ஒரு மாதமாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. பேருந்தை விட்டு குழந்தைகள் இறங்கியதும் நிழற்கூரை இல்லாததால், நனைந்து கொண்டே வீட்டுக்கு வருகின்றனர். அதேபோல் காலையில் வெயிலில் காத்திருக்கின்றனர்.

இதனால் அவர்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்படுகிறது. இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இதனால் நாங்களே சேர்ந்து ஓலையில் நிழற்கூரை அமைத்தோம் என்று கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in