Published : 05 Sep 2022 03:21 PM
Last Updated : 05 Sep 2022 03:21 PM

‘உங்க இன்ஸ்டா ஐடி என்ன டீச்சர்?’ - பள்ளிக் கல்வியில் டிஜிட்டல் மயமும் கள நிலவரமும் | Teachers' Day Special

கோப்புப் படம்

பள்ளிக் கல்வித் துறையின் 2022-23-ம் ஆண்டுக்கான கொள்கை விளக்கக் குறிப்பில், "பள்ளிக் கல்வித் துறைக்கு 2022-23 ம் கல்வியாண்டிற்கு ரூ.36,895.89 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. பள்ளிக் கல்வித் துறையில் புதிய தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டதன் வாயிலாக ஆசிரியர்களின் நிர்வாகப் பணிச்சுமைக் குறைக்கப்பட்டு, கற்றல், கற்பித்தல் பணித்திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட பதிவேடுகளைக் கணினி மயமாக்குதல் வாயிலாக ஆசிரியர்களின் கல்வி சாராப் பணிகள் குறைக்கப்பட்டு எளிமையாக்கப்பட்டு உள்ளது. எதிர்வரும் காலங்களில் இதேப்போன்று பள்ளிக் கல்வித் துறையின் அனைத்து சேவைகளையும் இணைய வழியாகவே பெறுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்று தெரிவித்திருந்தது.

இதைப் பார்க்கும் பலருக்கும் அரசின் டிஜிட்டல் முறை முன்னெடுப்புகள், ஆசிரியர்களின் பணிகளை இலகுவாக்கியிருக்கிறது போலவே என்றே எண்ணத் தோன்றும். ஆனால், உண்மை வேறொன்றாக இருக்கிறது. எளிமையாக இருக்க வேண்டிய டிஜிட்டல்மயம் ஆசிரியர்களுக்கு சுமையாக மாறியிருக்கிறது என்பதே நிதர்சனம். அதிலும் குறிப்பாக எமிஸ் (TN EMIS – TamilNadu Education Management Information System ) என்ற வருகைப்பதிவு தொடர்பான பதிவேற்றம், உள்ளிட்ட பல்வேறு பதிவேடுகள் குறித்த பதிவேற்றங்கள் தொடர்பான உத்தரவுகள் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

EMIS செயலி மூலம்தான் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகைப்பதிவு பதிவேற்றம் செயப்படுகிறது. இந்த செயலியில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரு எண் வழங்கப்படுகிறது. அதேபோல் சம்பந்தப்பட்ட பள்ளி அமைந்துள்ள மாவட்டம், அந்தப் பள்ளிக்கென்று எல்லாவற்றுக்குமே தனித்தனி எண்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், செயலியில் ஒவ்வொரு மாணவரின் தனிப்பட்ட சுயவிவரங்கள், ஆதார், வங்கிக் கணக்கு, சான்றிதழ்கள், சாதி உள்பட அனைத்து விவரங்களும் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதேபோல ஆசிரியர்கள் குறித்த விவரங்களும் பதிவேற்றப்பட்டுள்ளது.

இந்த செயலியின் உதவியோடு சென்னையில் இருந்தபடியே, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளியில் படிக்கின்ற மாணாக்கர் அல்லது ஆசிரியர் குறித்த விவரங்களை மிக சுலபமாக எடுத்துவிட முடியும். இந்த வசதிகளை எல்லாம் வைத்து பார்க்கும்போது இது தேவையான ஒன்றுதானே இதை ஏன் ஆசிரியர்கள் பெரும் சுமையாக கருதுகின்றனர் என்றே கேள்வியே அனைவருக்கும் எழும். இன்னும் ஒருசிலர் புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ள வேண்டியது ஆசிரியர்களின் கடமையல்லவா என்றுகூட கேட்கலாம். ஆசிரியர்களும் இந்த அரசு மேற்கொண்டுள்ள இதுபோன்ற கால மாற்றத்துக்கு ஏற்ற முன்னெடுப்புகளை குறைகூறவில்லை. இதில் உள்ள நடைமுறை சிக்கல்களை நினைத்துதான் கவலைத் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து சமூக செயற்பாட்டாளரும், கவிஞரும் ஆசிரியையுமான சுகிர்தராணி கூறியது: “இந்த செயலியில், மாணவர்களின் பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், வங்கிக் கணக்கு உள்ளிட்ட பல்வேறு தகவல்களைப் பதிவேற்ற வேண்டும். இவற்றை நகரங்களில் வசிக்கும் பெற்றோர்கள் எளிதாக வாங்கி விடுகின்றனர். கிராமங்களில் சான்றிதழ்கள், வங்கிக் கணக்கு உள்ளிட்டவைகளைப் பெற்று தரவேற்றம் செய்வதில் பிரச்சினை உள்ளது.

அதேபோல், வருகைப்பதிவு தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 2 லட்சம் பேர் இந்த செயலியைப் பயன்படுத்தி மாணவர்களின் வருகையைப் பதிவேற்றுகின்றனர். காலை 9.30 மணியிலிருந்து 10 மணிக்குள் பதிவேற்ற வேண்டும். ஒரே நேரத்தில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் இருந்து பதிவேற்றம் செய்யப்படுவதால், குறிப்பிட்ட நேரத்துக்குள் வருகைப் பதிவேற்றம் செய்ய முடிவது இல்லை. அதிலும் பல நேரங்களில் இணையத்தின் இணைப்பு கிடைப்பது பெரும் சவாலாக இருக்கிறது. கொஞ்சம் தாமதமானாலும், விளக்கம் கேட்டு குறுந்தகவலோ, மின்னஞ்சலோ வந்துவிடுகிறது.

அதேபோலத்தான், மாணவர்களுக்கான திரைப்படங்கள் திரையிடுதலும். நான் தற்போது பணிபுரியும் பள்ளியில் மொத்தமாக ஆயிரம் பேரும், 6 முதல் 9-ம் வகுப்பு வரையில் மட்டும் 500 பேரும் படிக்கின்றனர். பள்ளிகளை எடுத்துக் கொண்டால், அதிகபட்சம் ஒன்று அல்லது இரண்டு ஸ்மார்ட் வகுப்பறைகள், ஒரு கணினி ஆய்வுக் கூடம் இருக்கும். இதில் பெரிய வகுப்பறையில் உட்கார வைத்தால்கூட ஒரு நேரத்தில் 50 பேரை உட்கார வைக்க முடிகிறது. அப்படியென்றால், 500 பேர் பார்க்கும்வரை எத்தனை முறை அந்த திரைப்படத்தை திரையிட்டுக் காட்டுவது. எனவே போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத இடங்களில், திரையரங்குகளில் மாணவர்களுக்கான திரைப்படங்களைத் திரையிடவும், மாணவர்களை அழைத்து சென்று வருவதற்கான வாகன வசதிகளையும் அரசு ஏற்படுத்தி தர வேண்டும்.

மேலும், நூலகங்களில் உள்ள அனைத்து நூல்களையும் தரவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. பெருவாரியான பள்ளிகளில், நூலகர் என்ற பணியிடமோ, நூலகத்திற்கு என்று தனி அறைகளோ இருப்பது இல்லை. இதுபோன்ற பள்ளிகளில் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு ஆசிரியருக்குத்தான் இந்த பணிகள் ஒதுக்கப்படுகின்றன. ஒவ்வொரு பள்ளியிலும் குறைந்தது 3000 முதல் 4000 புத்தகங்கள் உள்ளன. இவற்றை முழுவதுமாக பதிவேற்றுவது என்பது அசாத்தியமானதாக இருக்கிறது.

எனவே, என்னைப் பொருத்தவரை, டிஜிட்டல் முறை பள்ளி ஆசிரியர்களுக்கு அதிகமான சுமையையே ஏற்படுத்துகிறது. இது கற்பித்தலுக்கான நேரம் ஒதுக்குவதை குறைக்கிறது. என்னைக் கேட்டால், இந்த டிஜிட்டல் முறை வருவதற்கு முன்பிருந்த காலம் மிகவும் நன்றாக இருந்தது. இந்த பிரச்சினைகள் குறித்து, சுதந்திரமாக பேசும் உரிமையை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும்" என்றார்.

கலகல வகுப்பறை ஆசிரியர் சிவா கூறியது: “எல்லா புதிய மாற்றங்களுமே, நன்மை தீமைகளை கொண்டவைதான். இந்த டிஜிட்டல் முறையில் நிறைய தீமைகள் வருவதற்கான காரணம். பள்ளிகளும் ஆசிரியர்களும் டிஜிட்டல் யுகத்தில் நுழைந்த நேரத்தில், கரோனா வந்துவிட்டது. அந்த நேரத்தில் மாணவர்கள் கையில் செல்போன் இணையம் எல்லாவற்றையும் கொடுத்துவிட்டோம். இதனால், மாணவர்கள் நல்லதையும் தீமைகளையும் தெரிந்துகொண்டனர். இதனால் விளைந்த ஒரே நன்மை என்னவென்றால், எந்தவொரு விஷயம் குறித்தும் தேட வேண்டும் என்ற பழக்கம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால், அவர்களுக்கு இந்த டிஜிட்டல் யுகத்தில் மிக சுலபமாக கிடைக்கும் இந்த தகவல்களில் எது உண்மை எது பொய் என்பது தெரிந்திருப்பது இல்லை.

எனவே, அதை மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றால், ஆசிரியர்கள் அனைத்தும் கற்றுத்தெரிந்தவர்களாக இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அப்போதுதான், மாணவர்களுக்கு இந்த தொழில்நுட்பங்களின் எல்லை எது என்பது குறித்தும், எங்கு மனிதர்கள் அவர்களுக்கு தேவைப்படுவார்கள் என்பது குறித்தும் நாம் கற்பிக்க முடியும். இதற்காக இந்த டிஜிட்டல் யுகத்து தொழில்நுட்பங்களை ஆசிரியர்கள் சரியாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதைவிடுத்து, நாங்கள் பழைய மாதிரியே பாடம் நடத்துவோம் என்றால், இன்றைய சூழலில் சாத்தியமில்லை. உங்க இன்ஸ்டா ஐடி என்ன டீச்சர்? என்ற கேள்வியைத்தான் மாணவர்களிடமிருந்து பல நேரங்களில் ஆசிரியர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

எனவே, டிஜிட்டல் யுகத்தில் மாணவர்களைவிட ஆசிரியர்கள் அதிகமான தொழில்நுட்பம் சார்ந்து தெரிந்திருக்க வேண்டியுள்ளது. அப்போதுதான் அவர்களுக்கு எந்தவொரு விஷயத்தை சரியாக தேடுவது எப்படி, எங்கு தேடுவது, தேடிய விஷயங்கள் ஏன் கிடைக்கவில்லை என்றெல்லாம் அவர்களுக்கு விளக்க முடியும். எனவே டிஜிட்டல் யுகத்திற்கு ஏற்றவாறு ஆசிரியர்கள் தங்களை தகவமைத்துக் கொள்ள வேண்டும்" என்றார்.

ஆசிரியர் ஏர் மகராசன் கூறியது: “டிஜிட்டல் கல்விமுறை முன்னெடுப்புகளைத் தொழில்நுட்ப ரீதியாக பார்க்கும்போது சிறந்தவைப் போலத்தான் தோற்றம் அளிக்கும். ஆனால் உண்மை அதுவல்ல. ஏற்கெனவே ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவும் சூழலில், இந்த டிஜிட்டல்மயம் ஆட்குறைப்புக்கு வழிவகுக்கும். டிஜிட்டல் சார்ந்த நடவடிக்கைகள் ஆசிரியர்களின் கற்பித்தல் சாரந்த பணிகளை நோக்கி பயணித்தால் ஆட்சேபனை இல்லை. மாறாக இந்த நடவடிக்கைகளை ஆசிரியர்கள் மாணவர்களுக்கிடையே வகுப்பறையில் இருக்கக்கூடிய கற்றல், கற்பித்தல் என்ற ஆத்மார்த்தமான உணர்வுபூர்வமான நடவடிக்கைகளை மாற்றி நெருக்கடியை, ஒரு வகை திணிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, காலை நேர வருகைப்பதிவு.

பள்ளிக்கு வரும் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கு முதல் பாடவேளை என்பது மிகவும் முக்கியமானது. நம் காலத்தில் இருந்த முறைப்படி வருகைப்பதிவு செய்தால், அதிகபட்சம் 10 நிமிடத்தில் முடித்துவிடலாம். ஆனால், டிஜிட்டல் முறையில் வருகைப் பதிவெடுக்கும் ஆசிரியர்கள் சர்வர் உடன் போராடி 30 நிமிடங்களுக்கு மேல் செலவழித்து வருகைப்பதிவை பூர்த்தி செய்து தகவல்களைத் தரவேற்ற வேண்டியுள்ளது. இதனால் ஒவ்வொரு பள்ளியின் முதல் பாடவேளையும் இப்படியாகத்தான் முடிகிறது.

இதனால், உயிரோட்டமான வகுப்பறைகளில் ஆசிரியர்களின் ஆக்கப்பூர்வமான கற்பித்தல் பணியை செய்ய முடிவதே இல்லை. மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கவும் வேண்டும், அரசு கேட்கின்ற தகவல்கள், தரவுகள் அனைத்தையும் பதிவேற்றமும் செய்ய வேண்டும் என்பது, ஆசிரியர்களுக்கு ஒரே நேரத்தில் இரண்டு குதிரைகளில் சவாரி செய்வதற்கு இணையான நெருக்கடியாக உள்ளது.

அரசின் சார்ந்த டிஜிட்டல் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள தனியாக ஆட்களை நியமித்தால், இந்த பணிகள் ஆசிரியர்களுக்கு சிரமமாக இருக்காது. தரவேற்றம், பதிவேற்றம் எல்லாம் அலுவலகம் சார்ந்த பணிகள், அதுவும் ஆசிரியர்கள் மீது திணிக்கப்படுவதால், கற்றலும் கற்பித்தலும் பாதிக்கப்பட்டு, ஆசிரியர்களால் தங்களது பாடங்களை திறம்பட பயிற்றுவிக்க முடியாத நிலை ஏற்பட்டு, வேலை பார்க்க முடியாத நிலை ஏற்படுகிறது.

அதிலும், டிஜிட்டல் மயம் புகுத்தப்பட்ட பிறகு உடனுக்குடன் தரவுகளையும், தகவல்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டியுள்ளது. இந்த விரைவுத் தன்மை, பல ஆசிரியர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 8 மணி நேர வேலையில், டிஜிட்டல் பிரச்சினைகளுக்காக 4 மணி நேரம் செலவாகிறது. இதனால் முழுமையான, உண்மையான உணர்வுடன் ஆசிரியர்களின் கற்பிக்கும் நோக்கத்தில் தடங்கல் ஏற்பட்டுள்ளது" என்றார்.

ஒரு ரோஜா பூ, விலையுயர்ந்த பேனா, பள்ளிகளின் வசதிக்கேற்ற இனிப்புகள், அன்று ஒருநாள் மட்டும் சற்றே நீட்டிக்கப்பட்ட அசெம்பிளி நேரக் காலக் கெடுவுக்குள் சின்ன கொண்டாட்டங்கள் என்று ஆசிரியர் தினத்தை சுருக்கி விடாமல், அரசு கொண்டு வரும் அல்லது பிரகடனப்படுத்தும் அறிவிப்புகளின் சாத்தியங்கள் குறித்து களத்தில் இருக்கும் ஆசிரியர்கள் சந்திக்கும் நடைமுறைச் சிக்கல்கள் குறித்து இந்த ஆசிரியர் தினத்திற்கு பிறகாவது அவர்களது கருத்துகளை சுதந்திரமாக தெரிவிக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்பதே அனைவரது விருப்பமும், கனவும்.

t1

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x