கலை, அறிவியல் கல்லூரிகளில் நடப்பாண்டில் கூடுதல் மாணவர் சேர்க்கை - உயர்கல்வித் துறை அரசாணை வெளியீடு

கலை, அறிவியல் கல்லூரிகளில் நடப்பாண்டில் கூடுதல் மாணவர் சேர்க்கை - உயர்கல்வித் துறை அரசாணை வெளியீடு
Updated on
1 min read

சென்னை: நடப்பாண்டு அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 20 சதவீதமும், அரசு உதவி கல்லூரிகளில் 15 சதவீதமும், தனியார் கல்லூரிகளில் 10 சதவீதமும் கூடுதலாக மாணவர்களை சேர்த்துக் கொள்ள உயர்கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது.

தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர சமீபகாலமாக மாணவர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கிறது. இதனால் ஒவ்வொரு கல்லூரிகளிலும் சேர்க்கை இடங்களைவிட கூடுதல் மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.

அமைச்சர் அறிவிப்பு

அரசு, தனியார் உட்பட அனைத்துவித கல்லூரிகளிலும் இந்நிலை நீடிப்பதால் முந்தைய வருடங்களை போலவே இந்த ஆண்டும் சேர்க்கை இடங்களை உயர்த்தி கொள்ள அனுமதி வழங்கப்படும் என்று உயர்கல்வி அமைச்சர் க.பொன்முடி அறிவித்திருந்தார். அதன்படி கலை, அறிவியல் கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளித்து உயர்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக உயர்கல்வித்துறை முதன்மைச் செயலர்தா.கார்த்திகேயன் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:

20 சதவீதம் கூடுதல் சேர்க்கை

கடந்த கல்வியாண்டை போல் இந்த ஆண்டும் விண்ணப்பங்கள் அதிகமாக பெறப்பட்டுள்ளதால் மாணவர்களின் நலன்கருதி, நடப்பு கல்வியாண்டில்(2022-23) கலை, அறிவியல் பாடப்பிரிவுகளில் தலா 25 சதவீதம் கூடுதல் சேர்க்கைக்கு அனுமதி கோரி கல்லூரிக்கல்வி இயக்குநர் கருத்துரு அனுப்பியிருந்தார். அதையேற்று நடப்பு கல்வியாண்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உள்ள அனைத்து பாடப்பிரிவுகளிலும் 20 சதவீதம் வரை கூடுதலாக மாணவர்களை சேர்த்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.

இதேபோல், அரசு உதவி கல்லூரிகளில் 15 சதவீதமும், தனியார் கல்லூரிகளில் 10 சதவீதமும் கூடுதலாக மாணவர்களை சேர்க்க அனுமதி அளிக்கப்படுகிறது.

நிபந்தனையை பின்பற்ற வேண்டும்

இதற்காக சார்ந்த பல்கலைக்கழகங்களின் ஒப்புதலை அந்தந்த கல்லூரிகள் பெற வேண்டும். கூடுதல் மாணவர்களை சேர்க்கும்போது கூடுதல் பணியிடங்கள் கோரக்கூடாது போன்ற நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும். மேலும், புதிதாக சேர்க்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை கல்லூரிக்கல்வி இயக்குநரகம் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in