

சென்னை: சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் எம்.டெக். விஎல்எஸ்ஐ டிசைன் பட்டப் படிப்பானது, நாடு தற்சார்பு அடைய செய்யக்கூடிய முயற்சியாகும் என்று சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி கூறினார்.
டாடா எலெக்ட்ரானிக்ஸ் உதவியுடன் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகம் நடத்தும் எம்.டெக். விஎல்எஸ்ஐ டிசைன் பட்டப் படிப்பில் சேர்ந்து பயிலும் முதல் தொகுதியைச் சேர்ந்த 20 மாணவர்கள் தங்களது 2-ம் ஆண்டு படிப்பை தொடர வரும் செப்டம்பரில் தைவான் செல்ல உள்ளனர்.
இந்நிலையில், சென்னையில் நேற்று நடத்திய இந்திய-தைவான் கூட்டுறவு பற்றிய நிகழ்ச்சியில் சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி பேசும்போது, “சாஸ்த்ராவின் இந்த முயற்சி 1947-ல் சுதந்திரம் பெற்ற இந்தியாவுக்கு 2047-ல் தொழில்நுட்ப சுதந்திரம் கிடைக்க வழிகோலுவதாகும். இந்தியா - தைவான் இடையேயான இந்த முக்கிய கூட்டுறவு இந்தியாவுக்கு செமிகண்டக்டர் உற்பத்தி துறையில் தேவையான மனித ஆற்றலை அளிக்க வல்லது” என்றார்.
நிகழ்ச்சியில் டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் ரான்ஜன் பந்தோபாத்யாயா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும்போது, “நமக்கு உள்ளமனித ஆற்றல் பற்றாக்குறையைஇந்த கூட்டு முயற்சி போக்கும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
சாஸ்த்ரா துணைவேந்தர் எஸ்.வைத்தியசுப்பிரமணியம் பேசும்போது, “இந்த மாணவர்கள் 2-ம் ஆண்டு படிப்பை தைவானின் யுவான் சி மற்றும் ஆசியா பல்கலைக்கழகங்களில் தொடருவார்கள். மேலும் அங்குள்ள சிறந்த செமிகண்டக்டர் நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் பயிற்சி பெறுவார்கள். சாஸ்த்ரா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இவர்களுக்கு முழு நிதி உதவியை அளிக்கிறது. சாஸ்த்ரா பல்கலையில் நவீன விஎல்எஸ்ஐ ஆய்வுக் கூடத்தையும் அமைக்க உள்ளது” என்றார்.