

சென்னை பல்கலைக்கழகம்வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் சென்னை பல்கலைக்கழகத்தில் இலவச கல்வி திட்டம் கடந்த 2010-ம்ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் சென்னை பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் இலவசமாக பட்டப் படிப்பு படிக்கலாம்.
விண்ணப்பிக்கும் மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம்ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். ஏழை மாணவர்கள், பெற்றோர் இல்லாதவர்கள், விதவைகளின் குழந்தைகள், முதல்தலைமுறை பட்டதாரி மாணவர்கள் ஆகியோருக்கு இந்த திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆண்டு தோறும் சுமார் 250 மாணவ, மாணவிகள் இந்த திட்டத்தின்கீழ் பயன்பெற்று வருகின்றனர்.
அந்த வகையில், நடப்பு கல்வி ஆண்டில் இந்த இலவச கல்வி திட்டத்தின்கீழ் 194 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.கவுரி சேர்க்கை ஆணைகளை நாளை (ஆக.22) வழங்குகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.