

சென்னை: பொறியியல் கல்லூரிகளில் 2-ம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஆக.22-ம் தேதி தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு: பல்கலை. இணைப்பு அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரி
களில் பிஇ, பிடெக், பிஆர்க், எம்பிஏ ஆகிய படிப்புகளில் 2-ம் ஆண்டு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நடப்பு கல்வியாண்டுக்கான (2022-23) வகுப்புகள் ஆக.22-ல் தொடங்கி டிச.8-ம் தேதி வரை நடைபெறும். இவர்களுக்கான செய்முறைத் தேர்வு டிச.10-ல் இருந்தும், எழுத்துத் தேர்வுகள் டிச.21-ல் இருந்தும் நடத்தப்பட உள்ளது. விரிவான தேர்வுக்கால அட்டவணை பின்னர் வெளியிடப்படும்.
தேர்வுக்குப் பின் விடுமுறை அளிக்கப்பட்டு, மீண்டும் 2023 ஜன.23-ம் தேதி முதல் அடுத்த பருவத்துக்கான வகுப்புகள் தொடங்கும். பல்வேறு விதமான கற்றல் செயல்பாடுகளால் வகுப்புகள் குறைவாக இருப்பின் சனிக்கிழமைகளிலும் தேவைக்கேற்ப கல்லூரிகள் இயங்கலாம். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, சேர்க்கை கலந்தாய்வு முடிந்தபின் வகுப்புகள் தொடங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.
இதற்கிடையே, மாணவர் சேர்க்கையை முடித்துவிட்ட பெரும்பாலான அரசு உதவி மற்றும் தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர் களுக்கு நேற்று முதல் வகுப்புகள் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.