

புதுடெல்லி: பாரம்பரிய அறிவுத்திறன் மின்னணு நூலகத்தின் தரவுத்தளத்தை அனைவரும் பயன்படுத்துவதம் வகையில் விரிவுபடுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பு: புதிய கல்விக் கொள்கை 2020-ன் கீழ், பாரதிய ஞானப் பரம்பரை மூலம் சிந்தனை மற்றும் தலைமை அறிவுத்திறனை புகுத்துவது பாரம்பரிய அறிவுத்திறன் மின்னணு நூலகத்தின் நோக்கமாக உள்ளது. இந்திய பாரம்பரிய அறிவு தேசிய மற்றும் உலகளாவிய தேவைகளுக்கு சேவை செய்வதற்கான மகத்தான ஆற்றலை அளிக்கிறது. இதன் மூலம் சமூக நன்மைகள் மற்றும் பொருளாதார வளர்ச்சியை வழங்குகிறது.
உதாரணமாக, நம் நாட்டில் இருந்து பாரம்பரிய மருத்துவ முறைகளான ஆயுர்வேதம். சித்தா, யுனானி மற்றும் ஆரோக்கியத்திற்கான சோவ ரிக்பா, யோகா ஆகிய+வை இன்றும் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த மக்களின் தேவைகளுக்கு சேவை செய்கின்றன. கோவிட்- 19 பாதிப்பின் போது, இந்திய பாரம்பரிய மருந்துகளின் நன்மைகளை காண முடிந்தது. நோய் எதிர்ப்பு, நிவாரணம், வைரஸ் எதிர்ப்பு ஆகிய பயன்களை இந்த மருத்துவ முறையில் உணர முடிந்தது.
காப்புரிமை தளங்களைத் தவிர மற்ற தரவுகளை பயன்படுத்துவதற்கு தற்போது வழங்கப்பட்டுள்ள ஒப்புதல், புதுமை மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கு தற்போது நடைமுறையுடன் பாரம்பரிய அறிவை இணைப்பதற்கு வழிவகுக்கும். பாரம்பரிய அறிவு மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் அடைவதற்கு பாரம்பரிய அறிவுத்தள மின்னணு நூலகத்தில் உள்ள தகவல்கள் முக்கிய பங்காற்றும்.
இந்த தளத்தில் உள்ள உள்ளடக்கங்கள், இந்திய பாரம்பரிய மருத்துவத்தை ஏற்றுக்கொள்ளும் அதேவேளையில், உற்பத்தியாளர்கள், கண்டுபிடிப்பாளர்களை மதிப்பு மிக்க நமது பாரம்பரிய மருத்துவத்தில் ஆதாயமிக்க நிறுவனங்களை உருவாக்க உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.