

ராமேசுவரம்: மாணவர்களுக்கு அறிவியல் திறனை வளர்ப்பதற்காக இந்தியாவில் முதல் முறையாக தமிழில் வானொலி நாடகங்களை பாம்பே ஐஐடி தனது ஸ்போக்கன் டுட்டோரியல் புரோகிராம் திட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தி உள்ளது.
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் நிதி உதவியின் மூலம் மும்பையில் உள்ள பம்பாய் இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (பாம்பே ஐஐடி) ஜூன் 2009-இல் ஸ்போக்கன் டுட்டோரியல் புரோகிராம் என்கிற திட்டத்தை உருவாக்கியது.
இந்தியாவில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஆங்கிலத்தில் சரளமாக பேச முடியாததால், தங்களின் தாய்மொழியில் பயில்வதற்காக இணைய வழியில் கல்வி கற்பித்தலுக்கான பாடத்திட்டங்கள் ஸ்போக்கன் டுட்டோரியல் புரோகிராம் மூலம் பாம்பே ஐஐடி உருவாக்கியது. இதன் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்கள் நிபுணத்துவத்தை வளர்த்துக் கொள்ளவும், இளைஞர்கள் தங்களின் வேலை வாய்ப்புத் திறனை அதிகரிக்கவும் இது வாய்ப்பாக அமைந்தது.
இந்நிலையில், பாம்பே ஐஐடி தனது ஸ்போக்கன் டுட்டோரியல் புரோகிராம் திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு அறிவியல் திறனை வளர்ப்பதற்காகவும், அறிவியலை பொது மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாக, "அன்றாட வாழ்வில் அறிவியல்" எனும் வானொலி நாடகத் தொடரை ராமேசுவரம் அருகே பாம்பனில் உள்ள ‘கடல் ஓசை’ சமுதாய வானொலியுடன் இணைந்து தயாரித்துள்ளது.
இந்த வானொலி நாடகத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி ராமநாதபுரம் ஆட்சியர் வளாகத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் கடல் ஓசை சமுதாய வானொலி நேரலையில் அன்றாட வாழ்வில் அறிவியல் நாடக நிகழ்ச்சியின் நேரலையை துவங்கி வைத்தார்.
பாம்பே ஐஐடியின் ஸ்போக்கன் டுட்டோரியல் புரோகிராமின் திட்டத் தலைவர் பேரா. கண்ணன் மொட்க்கலயா, இந்த வானொலி நாடகத் தொகுப்பின் ஆசிரியர் சாய்சுதா சுகவனம், மாவட்ட வன உயிரின காப்பாளர் ஜெகதீஸ் பகான் சுதாகர், கடல் ஓசை நிலைய இயக்குநர் காயத்ரி உஸ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இது குறித்து ஐஐடி பாம்பேயின் பேரா. கண்ணன் மொட்க்கலயா கூறியதாவது: ஸ்போக்கன் டுட்டோரியல் புரோகிராம் மூலம் 70 லட்சம் மாணவ, மாணவியர்கள் பயனடைந்துள்ளனர். அது போல இந்த "அன்றாட வாழ்வில் அறிவியல்" தொடரை கேட்பவர்களின் வாழ்க்கையில் கண்டிப்பாக ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும்.
இந்தியாவில் முதல் முதலாக தமிழில் வானொலி நாடகமாக அன்றாட வாழ்வில் அறிவியல் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாடகமும் அதிகபட்சம் 4 நிமிடங்களைக் கொண்டது. கடல் ஓசை வானொலியில் தினந்தோறும் நான்கு முறை என ஒரு வருடத்திற்கு ஒலிபரப்பப்படும். பாம்பனை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு வானொலிகளிலும், தமிழைத் தொடர்ந்து, இந்தியாவில் முழுவதும் 22 மொழிகளில் பல்வேறு வானொலிகளில் ஒலிபரப்ப உள்ளோம்.
கரோனா பரவலுக்கு பிறகு ஆன்லைன் மூலமாகவும் மாணவர்கள் கல்வி பயில வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் கிராமப்புற மாணவர்களுக்கு அடிப்படை அறிவியல் திறனைப் பெறுவதற்கும், அன்றாட வாழ்க்கையில் அறிவியல் பயன்பாடு குறித்து அறிந்து கொள்ளவும், இந்த வானொலி நாடகங்கள் உதவும், என்றார்.
கடல் ஓசை நிலைய இயக்குநர் காயத்ரி உஸ்மான் கூறியதாவது, இந்நிகழ்ச்சியை கடல் ஓசை சமுதாய வானொயில் நேரலையாக மட்டுமின்றி கடல் ஓசை இணையதளம், யூடியூப் மற்றும் பாட்காஸ்ட் (Podcast) வழியாகவும் கேட்கலாம். மேலும் இந்த வானொலித் தொடர் ராமநாதபுரம் மாவட்டத்தின் அனைத்து பள்ளிகளுக்கும் இலவசமாக வழங்கப்பட உள்ளது, என்றார்.