

சென்னை: சென்னை ஐஐடி, அமெடியஸ் லேப்ஸ் இணைந்து, கேட் தேர்வுக்கு 10 லட்சம் பேரை கட்டணமின்றித் தயார்படுத்தும் வகையில் ஆன்லைன் தளத்தைத் தொடங்கி உள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:
ஐஐடி மெட்ராஸ்-ன் தேசிய தொழில்நுட்ப மேம்பாடு கற்றல் திட்டத்தின் வாயிலாக கேட் தேர்வுக்குத் தயார்படுத்தும் வகையில், 'NPTEL GATE' என்ற பெயரில் ஆன்லைன் போர்ட்டல் தொடங்கப்பட்டு உள்ளது. கேட் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் எண்ணத்துடன், இந்தியாவின் முன்னணிப் பயணத் தொழில்நுட்ப அமைப்பான அமெடியஸ் லேப்ஸ் பெங்களூரு-வின் சமூகப் பொறுப்பு நிதியுதவியுடன் இயங்கும் 'NPTEL GATE' போர்ட்டலை அனைத்து மாணவர்களும் கட்டணம் ஏதுமின்றிப் பயன்படுத்தலாம். என்பிடெல் (NPTEL) என்பது ஐஐடிக்கள், ஐஐஎஸ்சி ஆகியவற்றின் கூட்டுமுயற்சியில், கட்டணமின்றி ஆன்லைன் சான்றிதழ் படிப்புகளை வழங்கும் திட்டமாகும்.
கேட் தேர்வுக்குத் தயார்படுத்தும் போர்ட்டலை https://gate.nptel.ac.in. என்ற இணையதள முகவரியில் தொடர்புகொள்ளலாம்.
ஐஐடிக்கள், ஐஐஎஸ்சி ஆகியவற்றில் முதுநிலைப் படிப்பு அல்லது பிஎச்.டி.யில் சேரவும், புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கவும் நாடு தழுவிய அளவில் நுழைவுத் தேர்வாக பொறியியல் பட்டதாரி தகுதித் தேர்வு இருந்து வருகிறது. பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களும் கேட் மதிப்பெண் அடிப்படையிலேயே வேலைக்கு நபர்களை நியமிக்கின்றன.
என்பிடெல் வசமுள்ள 2,400க்கும் மேற்பட்ட தலைப்புகளில் இருந்து பொறியியல், அறிவியல் ஆகியவற்றில் தற்போதைய பாடத் திட்டங்களுக்கு ஏற்ப பாடத் தொகுப்பை வழங்குவதே இதன் நோக்கமாகும். அத்துடன் கேட் பாடத் திட்டத்தின் அடிப்படையில் வீடியோ தீர்வுகள், செய்முறைத் தேர்வுகள், ஆன்லைன் உதவிகள் ஆகியவை புதிய போர்ட்டல் மூலம் வழங்கப்படும்.
போர்ட்டல் தொடக்க விழாவில் பேசிய ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி கூறுகையில், "கேட் தேர்வு என்பது மாணவர் ஒருவர் இளங்கலைப் படிப்பைப் படிக்கும்போது அவர் பெற்ற அடிப்படை அறிவை சோதிக்கிறது. கேட் தேர்வில் வெற்றி பெறுவோருக்கு உயர்படிப்பு, வேலைவாய்ப்பு ஆகிய இரு வாய்ப்புகளும் கிடைக்கிறது. என்பிடெல் தனது பாடத் தொகுப்புகளை வழங்கி மாணவர்களைத் தயார்படுத்த உதவுகிறது. அத்துடன் அவர்களுக்கு சமவாய்ப்பை வழங்கி எல்லோரும் போட்டிக்குத் தயார்படுத்தும் சூழலை உருவாக்குகிறது" என்றார்.
கேட் தேர்வுக்கு தயார்படுத்துவதற்கான பிரத்யேக போர்ட்டலின் சிறப்பு அம்சங்களை எடுத்துரைத்த ஐஐடி மெட்ராஸ்-ன் என்பிடெல் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ராமகிருஷ்ணா பசுமார்த்தி, "என்பிடெல் பாடங்கள் குறித்த விவாதக் களங்களில் பங்கேற்கும் பல மாணவர்கள் கேட் தேர்வுக்கு இதில் உள்ள பாடத் திட்டங்கள் போதுமானதா எனக் கேள்வி எழுப்புவார்கள். கேட் தொடர்பான பிரச்சனைகளைத் தீர்க்குமாறு கேட்டுக் கொள்வார்கள் அல்லது கேட் தேர்வுக்கு தயாராவதற்கான உதவிகளைக் கோருவார்கள். அதன் பின்னர்தான் அனைத்தையும் உள்ளடக்கியதாகவும், கேட் தேர்வுக்குத் தயார்படுத்தும் விதத்திலும் ஒரு தளத்தை உருவாக்குவது பற்றி சிந்தித்தோம். அத்துடன் கேட் தேர்வு எழுதுவோருக்கு நேரடிக் கற்றலை செயல்படுத்தும் நோக்கில் அண்மையில் நேரடி வழிகாட்டல் அமர்வுகளையும் தொடங்கினோம்" எனக் குறிப்பிட்டார்.