அரசு கலை, அறிவியல் கல்லூரியில் சேர்க்கை தாமதம் - பணிகளை தீவிரப்படுத்த உயர்கல்வித் துறை அறிவுறுத்தல்

அரசு கலை, அறிவியல் கல்லூரியில் சேர்க்கை தாமதம் - பணிகளை தீவிரப்படுத்த உயர்கல்வித் துறை அறிவுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் 163 அரசு கலை,அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்பு மாணவர் சேர்க்கை இணையவழியில் நடத்தப்பட்டுவருகிறது. விண்ணப்பித்தவர்களின் விவரங்களை சரிபார்த்து, சேர்க்கை கலந்தாய்வை ஆகஸ்ட்5-ம் தேதி முதல் நடத்த வேண்டும் என்று கல்லூரிக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் 60-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் சேர்க்கை பணிகள் தொடங்கப்படாததால், மாணவர்கள் தவிப்பில் உள்ளனர்.

இந்நிலையில், கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைப் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்று கல்லூரிகளுக்கு உயர்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து உயர்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

திட்டமிட்டபடி 100-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. பல்வேறு கல்லூரிகளில் எதிர்பார்த்ததைவிட அதிக அளவிலான விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதன் விவரங்களை சரிபார்த்து, தரவரிசைப் பட்டியல் தயாரிக்க கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது.

இதுதவிர, நீலகிரி, கோவை போன்ற மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்துவருகிறது. இதன்காரணமாக அங்குள்ள அரசுக் கல்லூரிகளில் தரவரிசைப் பட்டியல் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மேலும், சில பகுதிகளில் அருகருகே உள்ள 2 கல்லூரிகளிலும் சேர மாணவர்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர். ஒரே நேரத்தில் கலந்தாய்வை நடத்தினால், மாணவர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதனால், ஏதேனும் ஒரு கல்லூரியில் மட்டும் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது.

எஞ்சிய கல்லூரிகளில் ஓரிரு நாட்களில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, சேர்க்கை தொடங்கப்படும். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு, கல்லூரிக்கல்வி இயக்குநரகம் வழியாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in