Published : 01 Aug 2022 06:26 PM
Last Updated : 01 Aug 2022 06:26 PM

கரூரில் இடைநின்ற 25 மாணவர்களை பள்ளியில் சேர்த்த ‘பள்ளிக்கூட மணி அடிச்சாச்சு’ இயக்கம்!

கரூர்: கரூரில் பள்ளிக்குச் செல்லாமல் இடை நின்ற 25 குழந்தைகள் ‘பள்ளிக்கூட மணி அடிச்சாச்சு’ இயக்கம் மூலம் மீண்டும் கல்வி கற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் பிரபுசங்கர் கூறியுள்ளார்.

கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் தோகைமலை ஊராட்சி ஒன்றியம் வாளியாம்பட்டியில் 2 ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிக்குச் செல்லாமல் இடை நின்ற 32 குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்காக, அவர்களின் அத்தியாவசிய தேவைகளான புத்தகங்கள், சீருடை, புத்தகப்பை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இன்று (ஆக. 1) செய்து கொடுக்கப்பட்டது.

மேலும், நீடிக்கப்பட்ட புதிய வழித்தடத்தில் பேருந்து சேவையை ஆட்சியர் பிரபுசங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும். பள்ளி செல்லும் குழந்தைகளை பேருந்து ஏற்றி, அதே பேருந்தில் ஆட்சியரும் பயணித்து பள்ளி வரை சென்று சந்தானம், குங்குமம், மலர், இனிப்பு வழங்கி மாணவிகளை பள்ளிக்கு வரவேற்று, வகுப்பறையில் அமர வைத்து, ஆசிரியர்கள் பாடம் எடுப்பதை ஆட்சியர் பிரபுசங்கர் பார்வையிட்டார்.

ஆய்வுக்கு பின்னர் ஆட்சியர் பிரபுசங்கர் கூறியது: "கரூர் மாவட்டத்தில் பள்ளிக்கூட மணி அடிச்சாச்சு என்ற இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் பள்ளிக்கு செல்லாமல் இடைநின்ற குழந்தைகளை கண்டறிந்து மீண்டும் பள்ளிக்கு சேர்க்கக்கூடிய இயக்கம் அமைந்திருக்கிறது. தோகை மலை ஊராட்சி ஒன்றியத்தில் வளியாம்பட்டியில் 32 குழந்தைகள் இடைநின்று 2 ஆண்டுகள் பள்ளிக்கு செல்லாமல் இருப்பது கண்டறியப்பட்டது.

தொடர்ச்சியாக அவர்கள் ஊரில் வீடு வீடாக சென்று என்னென்ன தேவை என்று கண்டறிந்து ஏன் பள்ளிக்கு குழந்தைகள் செல்லாமல் இருக்கிறார்கள் என்று ஆய்வு செய்யப்பட்டது. அதற்காக அந்த ஊருக்கு பேருந்து வசதி புதிதாக ஏற்பாடு செய்யப்பட்டு 32 பேரில் 25 குழந்தைகளை மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து அதிகாரிகள் பேருந்தில் அழைத்து கொண்டு ஆர்டி மலை அரசு உயர்நிலைப் பள்ளிக்கு சென்று வகுப்பறையில் விட்டனர்.

தொடர்ந்து இந்த குழந்தைகள் பள்ளிக்கு வருவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும். எந்த சூழ்நிலை அவர்கள் பள்ளிக்கு வருகிறார்கள் என்று கண்டறிய அவர்களுக்கு தகுந்த அனைத்து உதவிகளும் செய்யப்பட்டுள்ளது. இதன் முயற்சி முதல் வெற்றி பெற்றது இந்த முயற்சி வெற்றி பெற்றதை போல கரூர் மாவட்டத்தில் 2,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இடைநிற்றல் காரணமாக பள்ளி படிப்பை தொடராமல் இருப்பவர்கள் உரிய காரணம் கண்டறியப்பட்டு அந்த காரணம் சரி செய்யப்பட்டு மீண்டும் கல்வி கற்றல் தொடங்கிட அனைத்து விதமான முயற்சிகள் பள்ளிக்கூட மணி அடிச்சாச்சு நிகழ்ச்சி மூலம் செய்யப்படும்" என்று ஆட்சியர் கூறினார்.

மேலும், வாலியாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 19 பயனாளிகளுக்கு தொடக்க வேளாண்மை கூ ட்டுறவு கடன் சங்க மூலம் ரூ10.64 லட்சத்தில் கால்நடை பராமரிப்பு கடன் உதவிகளை ஆட்சியர் பிரபுசங்கர் வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பாதேவி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் இளஞ்செல்வி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் சைபுதீன், மாவட்ட சமூக நல அலுவலர் நாகலட்சுமி, மாவட்ட வழங்கள் அலுவலர் தட்சிணா மூர்த்தி, தமிழக அரசு போக்குவரத்து கழக கரூர் மண்டல மேலாளர் குணசேகரன், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் குணசீலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x