

சில நாட்களுக்கு முன்பு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், குரூப்-1 தேர்வில், கலந்தாய்வுக்கு பிறகு தேர்ச்சி பெற்ற, 66 பேர் கொண்ட இறுதிப் பட்டியலை வெளியிட்டது. இந்த வெற்றியாளர் பட்டியலில் ஓர் இன்ப அதிர்ச்சி - தேர்ச்சி பெற்ற 66 பேரில் 57 பேர் பெண்கள்!
ஒரு போட்டித் தேர்வில் மகளிர்பெற்று இருக்கும் இந்த வெற்றி விகிதம் (87%) தேசிய அளவில் மகத்தான சாதனை. தமிழக அரசுப் பணிகளில் 30% மகளிருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, மொத்தம் 66 பணியிடங்களில் 20 இடங்கள் சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் வரும். மீதம் உள்ள 46 பணியிடங்கள் பொதுப் போட்டியில் நிரப்பப்பட்டவை. இவற்றிலும் 37 இடங்களைக் கைப்பற்றி, ‘ஆணுக்குப் பெண்ணிங்கே இளைப்பில்லை காண்!' (பாரதி) என்று நிரூபித்து இருக்கிறார்கள். வாழ்க!
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு, மாவட்ட துணை ஆட்சியர் (DeputyCollector) துணை காவல் கண்காணிப்பாளர் (DSP) வணிக வரிஉதவி ஆணையர் உள்ளிட்ட மிகவும் பொறுப்பு வாய்ந்த உயர்பதவிகளுக்கான கடினமான தேர்வு. ஏறத்தாழ, ஐஏஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான யுபிஎஸ்சி தேர்வுக்கு இணையானது.
இத்தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்வோர் சுமார் 10ஆண்டுகளில் ஐஏஎஸ் பணிக்குப்பதவி உயர்வு பெறுவார்கள். இத்தனை உயர்ந்த பொறுப்புக்குவருகிற இளைய தலைமுறையினரில், 87% பெண்கள் என்பது நம்புவதற்கு அரிய வரலாற்றுச் சாதனை.
அரசுப் பணிகளில், அதிகாரப் பகிர்வில், சக ஆண்களுடன் போட்டியிட்டு பெண்கள் படைத்துஇருக்கும் இந்தச் சாதனை, தமிழ் நாட்டின் தனிச் சிறப்புகளில் ஒரு தனி அத்தியாயம். தமிழ்நாடுஅரசுப் பணியாளர் தேர்வாணை யத்துக்கு பாராட்டுகள்!
தொடர்ந்து பல ஆண்டுகளாகப் பெண்கள் முன்னேற்றத்தில் தீவிரஅக்கறை காட்டி, தகுந்த திட்டங்கள் தீட்டி சிறப்பாகப் பணிபுரிந்து வரும் தமிழக அரசுக்கு உளமார்ந்த நன்றிகள்.
ஆண்டுதோறும் 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மாணவிகளின் வெற்றி விகிதம் நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். இதன் நீட்சியாக, போட்டித் தேர்வுகளிலும் இளம் பெண்களின் வீச்சும் வீரியமும் மெச்சும்படி அமைந்துள்ளன.
வரலாற்றில் ஒவ்வொரு கட்டத்திலும் தமது அறிவால் திறமையால் தமிழகத்தின் பெருமையைஉயர்த்திப் பிடிக்கும் மகளிருக்கு, குரூப்-1 தேர்வில் சாதனை படைத்தபெண் தேர்வர்களுக்கு, ஒரு ராயல்சல்யூட்!
தொடரட்டும் இந்த சாதனைப் பயணம்!