

சென்னை: அண்ணா பல்கலை. பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்ணா பல்கலை.யில் கடந்த கல்வியாண்டு படிப்பு முடித்தவர்களுக்கு இன்னும் பட்டமளிப்பு விழா நடத்தப்படாததால் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தவிப்பில் ஆழ்ந்துள்ளனர்.
இந்நிலையில் அண்ணா பல்கலை.யின் 42-வது பட்டமளிப்பு விழாவை சென்னை கிண்டியில் உள்ள அதன் வளாகத்தில், வரும் 29-ம் தேதி நடத்துவதற்கு முடிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இதுகுறித்து பல்கலை. அதிகாரிகள் கூறும்போது, ‘‘பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் ஆளுநர் மாளிகை மூலம் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். சிறப்பு விருந்தினர்களின் ஒப்புதல் கிடைத்தபின் முறையான அழைப்பிதழ் வெளியிடப்படும்’’ என்றனர்.
இந்த பட்டமளிப்பு விழாவில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டங்களை பெறுவார்கள்.
கடந்தாண்டு மார்ச் மாதம் நடைபெற்ற 41-வது பட்டமளிப்பு விழாவில் அப்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.