

மதுரை: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவர்களுக்கான பெல்லோஷிப் உதவித் தொகை வழங்கப்படாமல் அலைக்கழிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
பல்கலை., கல்லூரிகளில் பிஎச்டி ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டுதலுக்கென சில விதிமுறைகள் உள்ளன. வழிகாட்டுதலுக்கு தகுதியுள்ள பேராசிரியரிடம் 8 பேரும், துணை பேராசிரியரிடம் 6 பேரும், இணைப் பேராசிரியரிடம் 4 மாணவர்களும் ஆராய்ச்சி மேற்கொள்ளலாம். இதன்படி, மாதந்தோறும் பெல்லோஷிப் என்ற உதவித்தொகையுடன் ஆராய்ச்சி பட்டம் மேற்கொள்ள பல்கலை மானியக்குழு நடத்தும் கேட், நெட் தேர்வில் அதற்கான மதிப்பெண்களை பெறவேண்டும். மதுரை காமராசர் பல்கலையில் கல்வி உதவித்தொகையுடன் பிஎச்டி பட்டம் பெற்ற ஓரிரு மாணவர்களுக்கான பெல்லோஷிப் உதவித் தொகையை வழங்குவதில் இழுத்தடிப்பு செய்வதாக புகார் எழுத்துள்ளது.
இது குறித்து பாதிக்கப்பட்ட ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியைச் சேர்ந்த முன்னாள் ஆராய்ச்சி மாணவர் ராமபூபதி தமிழக முதல்வரின் தனி பிரிவிற்கு கடந்த 12-ம் தேதி அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது: பல்கலை மானியக்குழு நடத்தும் கேட் தேர்வில் தேர்ச்சி பெற்று 2013 ஏப்ரலில் காமராஜர் பல்கலைக்கழக கணிதத்துறையில் உதவிப்பேராசிரியர் ஒருவர் வழிகாட்டுதலில் ஜூனியர் ரிசர்ச் ஃபெலோவாக (Junior Research Fellow) சேர்ந்தேன்.
மாதந்தோறும் ரூ.16 ஆயிரம் மற்றும் வீட்டு வாடகையாக 3,200 பெல்லோஷிப் விகிதத்தில் 2015 ஜூன் வரை சுமார் 2 ஆண்டு 2 மாதம் ஆராய்ச்சி செய்தேன். 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை ஓராண்டு 2 மாதம் மட்டுமே பெல்லோஷிப் தொகையை பெற்றேன். எஞ்சிய நாட்களுக்கு உதவித்தொகை பெறவில்லை. ஓராண்டுக்கான பெல்லோஷிப் தொகை ரூ. 3,27,600 கிடைக்கவில்லை.
இது தொடர்பாக எனது வழிகாட்டி பேராசிரியரிடம் கேட்டபோதிலும் பதில் இல்லை. தொடர்ந்து அலைக்கழிக்கப்படுகிறேன். 2022 ஏப்ரல் 27-ல் காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளரிடம் புகார் மனு அளித்தேன். எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து மே மாதம் பல்கலைக்கழக குறைதீர் முகாம் அலுவலகத்திலும் ( Grievance Redressal) முறையீடு செய்தேன். அங்கிருந்தும் எந்தப் பதிலும் இல்லை.
இதற்கிடையில், யுஜிசி நிர்வாகத்திடம் ஆர்டிஐ -யில் தகவல் கேட்டபோது, ஆராய்ச்சி வழிகாட்டி வரவு, செலவு விவரங்களை முழுமையாக சமர்பிக்கவில்லை என தெரியவந்தது. அதுகுறித்து உதவிப்பேராசிரியரிடம் கேட்டால் சில தினங்களில் அனுப்பி விடுகிறேன் என, தொடர்ந்து மூன்றாண்டாக இழுத்தடிப்பு செய்கிறார்.
பெரும்பாலும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு இறுதியாண்டில் 50 சதவீதம் கல்வி உதவித்தொகை கொடுக்கப்படுவது கிடையாது. மீறி கேட்டால் படிப்பிற்கு ஏதாவது பிரச்சினை ஏற்படுமோ என்ற தயங்கும் சூழல் உள்ளது. என்னை போன்று மேலும், சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆராய்ச்சி படிப்புக்கான நிலுவை தொகையை வழங்க பல்கலை. நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பல்கலை. பதிவாளர் (பொறுப்பு) சிவக்குமாரிடம் கேட்டபோது,‘‘ராமபூபதி மனு குறித்து எனது கவனத்திற்கு வரவில்லை. என்னை நேரில் வந்து சந்தித்து, மனு அளித்தால் என்ன நடந்திருக்கிறது என ஆய்வு செய்து அவருக்கு உதவிடுவோம்’’ என்றார்.