

சென்னை: தமிழ்நாடு நாள் உருவான வரலாறு குறித்த தகவல்களை பள்ளிகளில் சுவரொட்டிகள் மூலம் காட்சிப்படுத்தி, மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகம் முன்பு மெட்ராஸ் மாகாணம் என்று அழைக்கப்பட்டதை மாற்றி, முன்னாள் முதல்வர் அண்ணாதுரையால் 1967-ம் ஆண்டு ஜூலை 18-ம்தேதி ‘தமிழ்நாடு’ என்று பெயரிடப்பட்டது. அந்த நாள் தமிழ்நாடு தினமாகக் கொண்டாடப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, நடப்பாண்டு ‘தமிழ்நாடு தினம்’ நாளை (ஜூலை 18) கொண்டாடப்பட உள்ளது.
இது தொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
பள்ளிகளில் தமிழ்நாடு தின விழா கொண்டாடுவது குறித்து, தமிழ் வளர்ச்சித் துறைச் செயலர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இதையடுத்து, தமிழ்நாடு உருவான வரலாறு தொடர்பான தகவல்களை சுவரொட்டிகளாக தயார் செய்து, அனைத்து பள்ளிகளிலும் காட்சிப்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறைக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதற்கான சுவரொட்டிகள் மின்னஞ்சல் மூலமாக அனைத்து முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. இவற்றைப் பள்ளிகளில் ஜூலை 18-ம் தேதி காட்சிப்படுத்தும் வகையில், அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பிவைக்க வேண்டும். மேலும், இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையை, பள்ளிக்கல்வித் துறை ஆணையரகத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.