தமிழகத்தில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு - அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

தமிழகத்தில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு - அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை: சிபிஎஸ்இ பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு 5 நாட்கள் வரை அரசு பொறியியல், கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

தமிழகத்தில் பொறியியல், பாலிடெக்னிக், கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு நடந்துவருகிறது. சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. இதனால் உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தாமதம் ஏற்படும் சூழல் நிலவுகிறது. இதுதொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித் துறை அதிகாரிகளுடன் அமைச்சர் க.பொன்முடி நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் துறை செயலர் த.கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:

அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு நேற்றுடன் முடிந்துவிட்டது. பொறியியல் சேர்க்கை கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் ஜூலை 17-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு இதுவரை வெளியாகவில்லை.

இதன்காரணமாக அரசு பொறியியல், கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் காலஅவகாசம் நீட்டிக்கப்படுகிறது. சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவு வெளியான பின்னர் 5 நாட்கள் வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இது தமிழக பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும் பொருந்தும்.

கூடுதலாக 15% மாணவர் சேர்க்கை

இந்த ஆண்டு அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் அதிக விண்ணப்பங்கள் வருவதால் கூடுதலாக 15 சதவீத மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவர். பொறியியல் கல்லூரிகளின் தரம் குறித்து அண்ணா பல்கலைக்கழக கண்காணிப்புக் குழு ஆய்வு செய்துவருகிறது. அனைத்து மாணவர்களுக்கும் கல்லூரியில் இடம் கிடைப்பதற்கான அதிகபட்ச முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

இணையவழியில் இருந்து மாறி நேரடித் தேர்வு நடத்தப்பட்டதால் அண்ணா பல்கலை. முதலாமாண்டு தேர்ச்சி சதவீதம் குறைந்துவிட்டது. இதனால் மாணவர்கள் படிப்பு தடைபடாது. ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் அனைத்து பல்கலை மற்றும் கல்லூரிகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். அதற்கேற்ப பாடத்திட்டத்தை மாற்றும் பணிகள் நடந்து வருகின்றன. அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தேதி கொடுக்காததால் தாமதம் நிலவுகிறது. அவர் தேதி கொடுத்தால் விரைவில் பட்டமளிப்பு விழா நடத்தப்படும்.

மூவலூர் ராமாமிர்தம் கல்வி ஊக்கத்தொகைக்கு இதுவரை 2.2 லட்சம் மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். கல்லூரிகள் தொடங்கிய ஒரு மாதத்தில் அந்த திட்டம் தொடங்கி வைக்கப்படும். தற்போதைய சூழலில் மாணவர்கள் அரசியல் அறிவு பெறுவது அவசியம் என்ற நிலை உள்ளது. எனவே, முதல்வருடன் கலந்து ஆலோசித்து மாணவர் சங்கத் தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் பொன்முடி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in