Published : 04 Jul 2022 06:08 AM
Last Updated : 04 Jul 2022 06:08 AM

பட்டயப் படிப்பு முடித்தவர்கள் நேரடியாக பொறியியல் இரண்டாம் ஆண்டில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவிப்பு

சென்னை: பொறியியல் பட்டயப் படிப்பு முடித்து, அரசு மற்றும் உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில் பட்டப் படிப்பில் நேரடியாக 2-ம் ஆண்டு சேர விரும்புவோர், இன்று முதல் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தொழில்நுட்ப கல்வி இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பு. தொழில்நுட்ப கல்வி இயக்கக கட்டுப்பாட்டின் கீழ் கோயம்புத்தூர், சேலம், திருநெல்வேலி, பர்கூரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகள், காரைக்குடி அழகப்பா அரசுபொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி, வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரி, கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி ஆகிய அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் 2022-23 கல்விஆண்டுக்கான பகுதி நேர பி.இ.பட்டப் படிப்பில் நேரடியாக 2-ம் ஆண்டில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பதாரர்கள் தகுதி வாய்ந்த பட்டயப் படிப்பு முடித்து 2 ஆண்டுகள் முழுமையாக நிறைவுபெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணியாற்றுபவராகவோ, பணிபுரிந்தவராகவோ இருக்க வேண்டும். www.ptbe-tnea.com என்ற இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பம் இன்று (4-ம் தேதி) தொடங்கிஆகஸ்ட் 3-ம் தேதி முடிவுறும்.

பதிவுக் கட்டணத்தை டெபிட், கிரெடிட் கார்டு வாயிலாகவும், நெட் பாங்கிங் மூலமும் செலுத்தலாம்.

இணையதள வசதி இல்லாதவர்கள், தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையத்தை பயன்படுத்தலாம். அனைத்து மையங்களிலும் போதிய அளவில் கரோனா தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த கல்வி ஆண்டில் பகுதிநேர பட்டப்படிப்பு கலந்தாய்வு இணைய வழியிலேயே நடக்கும்.

கூடுதல் விவரங்களை மேற்கண்ட இணையதளத்திலேயே தெரிந்துகொள்ளலாம். இதுதவிர 0422-2590080 மற்றும் 9486977757 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x