

சென்னை: பொது நூலகத் துறை சார்பில் இலக்கியம், பொருளாதாரம், கல்வி, தொல்லியல் என பல்வேறு துறைகளின் சிறந்த ஆளுமைகளைக் கொண்டு ‘TN Talk’ என்ற நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கான அரசாணை பிறப்பித்து பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு:
பொது நூலக இயக்குநர் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு அமைத்து நடத்தப்படும் TN Talkநிகழ்ச்சியின் ஒவ்வொரு நிகழ்வும் மிக முக்கிய தலைப்பில் குறிப்பிட்ட மையக் கருத்துகளை கொண்டதாக அமையும். அந்த வகையில்ஆண்டுக்கு 25 நிகழ்ச்சிகள் நடைபெறும். சிறந்த பேச்சாளர்கள், துறை சார்ந்த வல்லுநர்களைக் கொண்டு புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், அரசு நிறுவனங்களுடன் இணைந்து இந்த நிகழ்ச்சி நடத்தப்படும். தமிழ், ஆங்கில வழியில் இது நடைபெறும். முன்கூட்டியே நிகழ்ச்சிக்கான அறிவிப்புகள் வெளியிடப்படும். இதை இணையதளம் வழியாக நேரலையில் ஒளிபரப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியை நடத்த ரூ.37.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, ஆண்டுக்கு 25 நிகழ்ச்சிகள் நடத்த பொது நூலகத் துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.