இந்திய கலாச்சார கல்வி முறையுடன் சென்னையில் சர்வதேச பள்ளி: ரூ.100 கோடி முதலீட்டில் விஐடி பல்கலைக்கழகம் தொடங்கியது

ஜி.வி.செல்வம்
ஜி.வி.செல்வம்
Updated on
2 min read

சென்னை: இந்திய கலாச்சார கல்வி முறையுடன் இணைந்த சர்வதேசப் பள்ளியை விஐடி பல்கலைக்கழகம் ரூ.100 கோடி முதலீட்டில் சென்னையில் தொடங்கியுள்ளது.

நம்நாட்டின் முன்னணி உயர்கல்வி நிறுவனமான வேலூர் விஐடி பல்கலைக்கழகம் பள்ளிக்கல்வியிலும் தற்போது நுழைந்துள்ளது. அதன்படி சென்னை கேளம்பாக்கம் அருகே காயார் பகுதியில் வேலூர் சர்வதேசப்பள்ளி (விஐஎஸ்) இந்த கல்வியாண்டு (2022-23) முதல் தொடங்கப்பட்டுள்ளது.

சுமார் 1,500ஏக்கர் வனப்பகுதிக்கு நடுவில் மொத்தம் 35 ஏக்கர் பரப்பில் இருபாலரும் படிக்கும் உண்டு உறைவிடப் பள்ளியாக நிறுவப்பட்டுஉள்ளது.

அதன் சிறப்பம்சங்கள் தொடர்பாக விஐஎஸ் பள்ளியின் தலைவர் ஜி.வி.செல்வம் கூறியதாவது: சர்வதேச அளவில் தரமிக்க பள்ளி ஒன்றை தொடங்க வேண்டும் என்ற எண்ணம் நீண்டகாலமாக மனதில் இருந்தது. இதற்காக நாடு முழுவதும் பல்வேறு பள்ளிகளுக்கு நேரடியாக சென்று அதன் செயல்பாடுகள் குறித்து பார்வையிட்டேன்.

இதுதவிர பெற்றோர் எந்தமாதிரியான பள்ளியை எதிர்பார்க்கிறார்கள் என்பது தொடர்பாக தனியார் நிறுவனம் மூலம் கருத்துக்கணிப்பு நடத்தினோம். அதில் இந்திய கலாச்சார கல்வியை தவறவிடுவதாக பெரும்பாலான பெற்றோர்கள் தெரிவித்தனர்.

இவற்றை கருத்தில் கொண்டுதான் 6 ஆண்டுகள் திட்டமிடலுக்கு பின்னர் வேலூர் சர்வதேசப்பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. இங்கு ஐசிஎஸ்ஐ மற்றும் கேம்பிரிட்ஜ் பாடத்திட்டம் வழியாக கல்வி பயிற்றுவிக்கப்படும். இதில் தனிமனித ஒழுக்கம், குடும்ப உறவின்மதிப்பை வலியுறுத்தும் இந்தியகலாச்சார முறைக்கு முக்கியத்துவம் இருக்கும்.

அதனால் பள்ளி வளாகத்தின் சூழலே ஒரு குடும்ப அமைப்பாக இருக்கும். இதற்காக ‘ஹவுஸ் பேரண்ட்’ (house parent) என்றதிட்டம் பள்ளியில் ஏற்படுத்தப்பட்டுஉள்ளது.

அதாவது, மாணவர்கள் தங்குமிடம் விடுதிகள்போல் அல்லாமல் வீடுகளை போன்ற உணர்வை வழங்கும். கூட்டுக் குடும்பம்போல் ஒவ்வொரு வீட்டிலும் தலா 6 பேர் தங்குவர். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அவர்களை கண்காணித்து வழிநடத்துவதற்காக அருகே ஹவுஸ் பேரண்ட் ஆசிரியர் தனியாக வசிப்பார். வகுப்பறையில் காலை ஆசிரியராக பணிபுரிபவர்கள் மாலை உறவினர்போல் பழகுவதற்கான சூழல் ஏற்படுத்தி தரப்படும். இதன்மூலம் குடும்ப உறவின்மதிப்பு மாணவர்கள் புரிந்து கொள்வார்கள்.

ஒரு வகுப்பறைக்கு 15 முதல் 20 மாணவர்கள்தான் இருப்பார்கள். மாணவர்களின் தனித்திறன்களை அடையாளம் கண்டு அவர்கள் விரும்பும் துறையில் சாதிக்க உறுதுணையாக இருப்போம்.

இதுதவிர மாணவர் விடுதிகளில் செல்போன், இணையதள வசதிகள் இருக்காது. மாணவர்கள் தங்கள் பெற்றோர்களிடம் கடிதம் மூலம் தகவல் தொடர்பு வைத்துக் கொள்வார்கள். தினமும் காலை உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதன்பின் கற்றல் பணிகள் அரை நாள் மட்டுமே நடைபெறும். மதியத்துக்குபின் விளையாட்டு, தனித்திறன் மேம்பாட்டுக்கான செயல்பாடுகள் நடைபெறும்.

ஆரோக்கியமான, ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் வழங்கப்படும். முதல்கட்டமாக 5 முதல் 8-ம் வகுப்பு வரை தொடங்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் 9 முதல் 12-ம்வகுப்புக்கு விரிவுப்படுத்தப்பட உள்ளன.

கல்விக்கு நிகராக விளையாட்டு, கலை உட்பட இதர செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும். இங்கு தமிழ், ஆங்கிலம், இந்தி, ஜெர்மன், பிரெஞ்சு உட்பட பல்வேறு மொழிகள் கற்றுத் தரப்படும். ஆங்கிலம் பயிற்று மொழியாகும். அதுதவிர்த்து ஒரு இந்திய மற்றும் வெளிநாட்டு மொழியை மாணவர்கள் படிக்க வேண்டும்.

மொத்த கல்விக் கட்டணமாக ஆண்டுக்கு ரூ.4.5 லட்சம் (விடுதி உட்பட) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.வளாகம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள், சிறப்பு மருத்துவ மையம், நவீன தொழில்நுட்ப ஆய்வகங்கள் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

வளாகத்தில் 135 இந்திய வகை மரங்கள் அதிகளவிலான வளர்க்கப்பட்டுள்ளன. எங்கள் பள்ளியை விட்டு வெளியேறும் மாணவர்கள் நற்பண்புகள் நிறைந்த வல்லவர்களாக திகழ்வார்கள். சுயமாகவும், சுதந்திரமாகவும் சிந்திக்கும் திறன் பெற்றிருப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in