

சென்னை: பிளஸ் 1 தேர்வு முடிவுகள் நேற்றுவெளியிடப்பட்டன. இதில் 90 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 2020-ம் ஆண்டைவிட 6 சதவீதம் குறைவாகும்.
தமிழக பள்ளிக்கல்வியில் 2018-ம் ஆண்டு முதல் பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. கரோனா பரவல் காரணமாக 2020-21 கல்வியாண்டில் பிளஸ் 1 தேர்வு ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் அனைவரும் முந்தைய தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி செய்யப்பட்டனர். தொற்று பாதிப்பால் கடந்த கல்வியாண்டிலும் (2021-22) பள்ளி திறப்பில் தாமதம் ஏற்பட்டது. பிளஸ் 1 வகுப்புக்கு செப்டம்பரில்தான் பள்ளிகள் திறக்கப்பட்டன.
இதை கருத்தில்கொண்டு பாடத்திட்டம் 35 சதவீதம் வரை குறைக்கப்பட்டு மாணவர்கள் தேர்வுக்கு தயார்படுத்தப்பட்டனர். இதையடுத்து, பிளஸ் 1 பொதுத்தேர்வு மே 10 முதல் 31-ம் தேதி வரை நடந்தது. இந்த தேர்வை மொத்தம் 8 லட்சத்து 43,675 மாணவ, மாணவிகள் எழுதினர்.
இந்நிலையில், பிளஸ் 1 தேர்வு முடிவுகள் நேற்று காலை 10 மணிக்கு தேர்வுத் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டன. மாணவர்களுக்கு மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி மூலமும், பள்ளிகளுக்கு மின்னஞ்சல் வழியாகவும் அனுப்பப்பட்டன.
பிளஸ் 1 தேர்வில் 7 லட்சத்து 59,856 (90%) மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது முந்தைய ஆண்டைவிட 6 சதவீதம் குறைவு ஆகும். மாணவர்கள் 84.86 சதவீதமும், மாணவிகள் 95 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களைவிட மாணவிகள் 10.13 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 103 அரசுப் பள்ளிகள் உட்பட மொத்தம் 2,605 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. 2020-ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 2,716 ஆக இருந்தது.
மாவட்ட வாரியான ஒட்டுமொத்த பள்ளிகள் தேர்ச்சியில் 95.56 சதவீதத்துடன் பெரம்பலூர் முதலிடம் பெற்றுள்ளது. விருதுநகர் (95.44%), மதுரை (95.25%) அடுத்த 2 இடங்களில் உள்ளன. கடைசி இடத்தில் வேலூர் (80%) உள்ளது. அரசுப் பள்ளிகள் தேர்ச்சிப் பட்டியலிலும் பெரம்பலூர் (92.43%) முதலிடமும், வேலூர் (71.84%) கடைசி இடமும் பிடித்துள்ளன.
பிளஸ் 1 தேர்வில் அதிகபட்சமாக கணினி பயன்பாடுகள் பாடத்தில் 2,186 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்துள்ளனர். கணக்குப் பதிவியலில் 2,163, கணினி அறிவியலில் 873, வணிகவியலில் 821, கணிதத்தில் 815, இயற்பியலில் 714, பொருளியலில் 637, உயிரியலில் 383, வணிக கணித பாடத்தில் 291, வேதியியலில் 138, விலங்கியலில் 16, தாவரவியலில் 3 மற்றும் மொழிப்பாடத்தில் 28 மாணவர்கள் முழு மதிப்பெண் எடுத்துள்ளனர். பிளஸ் 1 தேர்வு எழுதிய 4,470 மாற்றுத் திறனாளிகளில் 3,899 பேரும், 99 சிறை கைதிகளில் 89 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிளஸ் 1 மதிப்பெண்கள் உயர்கல்வி சேர்க்கைக்கு கணக்கில் கொள்ளப்படாது. எனவே, குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் கவலைப்பட வேண்டாம். தேர்ச்சி பெறாத மாணவர்களும் எந்த நிபந்தனையும் இன்றி வரும் ஆண்டில் பிளஸ் 2 வகுப்புக்கு செல்லலாம். அவர்கள் அடுத்துவரும் சிறப்புத் தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற்றால் போதுமானது. இதுதொடர்பான ஆலோசனைகள் பெற பள்ளிக்கல்வியின் தகவல் மையத்தை 14417என்ற எண்ணில் மாணவர்கள் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.