Published : 25 Jun 2022 02:35 PM
Last Updated : 25 Jun 2022 02:35 PM

பிளஸ் 2 மாணவர்கள் கவனத்துக்கு... வேலைவாய்ப்பு உள்ள உயர்கல்வி படிப்புகள் எவை? 

பிளஸ் 2 முடித்துவிட்டு அடுத்து என்ன படிப்பது, எங்கே படிப்பது, எதற்கு வேலைவாய்ப்புகள் அதிகம் என்பது குறித்த ஆய்வுகளில் மாணவர்கள், பெற்றோர்கள் தவிக்கும் நேரமிது.

விரும்பிய பாடமா, கல்லூரி முக்கியமா என்பன பல்வேறு கேள்விகளும் மனதில் எழும். நல்ல எதிர்காலம் உள்ள நூற்றுக்கணக்கான படிப்புகள் இருந்தும் பொறியியல், மருத்துவம், உள்ளிட்ட 20 படிப்புகளைதான் பெரும்பாலான மாணவர்கள் முன்னுரிமை அளித்து தேர்வு செய்கின்றனர்.

அதேபோல், விருப்பமும் கனவும் ஒருபுறம் இருக்க, சமூக அழுத்தத்தால் ஆர்வமில்லாத வேறு ஒரு படிப்பை பயில வேண்டிய கட்டாயத்துக்கு பல மாணவர்கள் தள்ளப்படுகிறார்கள். இதற்கு வேலைவாய்ப்பும், எதிர்கால வளர்ச்சியும் உள்ள படிப்புகள் குறித்த தகவல்கள் மாணவர்களுக்கு முழுமையாக சென்றடையாததே முக்கிய காரணமாகும்.

அந்தவகையில் நல்ல எதிர்காலமுள்ள படிப்புகள் குறித்த தகவல்களை கல்வியாளரும், ஆனந்தம் யூத் பவுண்டேஷன் நிறுவனருமான எஸ்.செல்வகுமார் விளக்குகிறார். அதன் விவரம் வருமாறு;-

பொறியியல்

இந்தாண்டும் வழக்கம் போலவே பொறியியல் படிப்புகளில் கணினி அறிவியல் (Computer Science) துறையை பெரும்பாலான மாணவர்கள் தேர்வு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். கணினி அறிவியல் துறையில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), தரவு அறிவியல் (Data Science), சைபர் செக்யூரிட்டி(Cyber Security), மெஷின் லேர்னிங் (Machine Learning), பிளாக் செயின்(Block Chain), கிளவுட் கம்ப்யூட்டிங் (CloudComputing) உள்ளிட்ட துறைகள் தற்போது உலகளவில் அதிவேகமாக வளர்ந்து வருவதை நம்மால் உணர முடிகிறது.

குறிப்பாக, தரவு அறிவியல் துறைகளில் ஒரே ஆண்டில் வேலைவாய்ப்பு 28 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. இந்த துறைகளின் அசுர வளர்ச்சியும், படித்து முடித்தவுடன் ஐடி தொழில்நுட்ப நிறுவனங்களில் கிடைக்கும் நல்ல ஊதியமும் மாணவர்களுக்கு ஒரு ஈர்ப்பை ஏற்படுத்துகிறது.

அதேநேரம் இந்த துறைகளை நேரடியாக தேர்வு செய்யாமல் கணினி அறிவியல் படிப்பை தேர்ந்தெடுப்பது நல்ல முடிவாகும். தற்போது வளர்ச்சி பெறும் செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் உள்ளிட்ட தொழில்நுட்பங்களுக்கு 4, 5 ஆண்டுகளுக்கு மாற்று அம்சங்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளன.

அதனால் கணினி அறிவியல் மட்டும் தேர்வு செய்தால்தேவைக்கேற்ப செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் போன்ற சிறந்த தொழில்நுட்ப பாடங்களை கூடுதலாக இணையவழியில் படித்துக் கொள்ளலாம். அதேபோல், கணினி அறிவியல் மெக்கானிக்கல், எலக்ட்டிரிக்கல் உட்பட முக்கிய பொறியியல் துறைகளிலும் வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.

உதாரணமாக மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்கும் ஒரு மாணவர் அதை முடித்துவிட்டு, Metallurgy படித்தால் எல்லா துறைகளிலும் அவர்களுக்கான வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. இதுதவிர சுற்றுச்சூழல், எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியால் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் ஆராய்ச்சி வடிவமைப்பு அலுவலகங்களை அமைத்து வருகின்றன.

எந்த பொறியியல் படிப்பையும் ஆழ்ந்து படித்தால் அவர்களுக்கான நல்ல வேலை வாய்ப்பை உருவாக்கி தந்திடும். பொறியியல் கல்வியை பொறுத்தவரை எந்த கல்லூரியில் படிக்கிறோம் என்பது மிக முக்கியம். நீங்கள் விரும்பிய கணினி அறிவியல் பாடத்தை சுமாரான கல்லூரியில் பயில்வதைவிட சிறந்த கல்லூரியில் மின்னணுவியல், எலக்ட்ரிக்கல் போன்ற வேறு பாடங்களை தேர்வு செய்வது நல்லது.

மருத்துவம்

மருத்துவத் துறையில் எம்பிபிஎஸ் மட்டும் படிப்பல்ல. தமிழகத்தில் இந்த ஆண்டு 1.4 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். அதில் சுமார் 10,000 பேருக்கு மட்டும் தான் எம்பிபிஎஸ் இடம் கிடைக்கும்.

எம்பிபிஎஸ் கிடைக்காத பட்சத்தில் சித்தா, ஹோமியோபதி, யுனானி, யோகா மற்றும் நேட்சுரோபதி போன்ற இந்திய மருத்துவ படிப்புகள், கால்நடை, வேளாண்மை, மீன்வளம், கடல்சார் ஆராய்ச்சி உட்பட வேலை வாய்ப்புகள் நிறைந்த இதர படிப்புகளையும் மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மருத்துவத் துறையில் ஒரு விஞ்ஞானியாக உயரும் அளவுக்கான வாய்ப்புகள் இருக்கின்றன. உதாரணமாக உங்கள் வீட்டில் அருகிலுள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி மைக்ரோ பயலாஜி(Micro Biology) படித்து 3 ஆண்டுகளுக்கு பிறகு வெறும் சில ஆயிரம் ரூபாய் செலவில் மத்திய அரசின் தேசிய உயர்கல்வி நிறுவனங்களில் M.Sc. Micro Biology, Molecular Biology, Genetic Science ஆகிய படிப்பை முடித்தால் கை நிறைய சம்பளத்துடன் வேலை கிடைப்பதுடன் சில ஆண்டுகளில் மருத்துவ துறையை சார்ந்த விஞ்ஞானியாக உங்களால் உயர முடியும்.

கரோனா பேரிடருக்குப் பின் மருத்துவத் துறையில் வேலை வாய்ப்புகள் உயர்ந்துள்ளன. தமிழ் நாடு எம்ஜிஆர் மருத்துவ பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் B.O.T. (Bachlor of Occupational Therapy), Accident and Emergency Care, Cardiac Technology, Audiology and Speech Therapy உட்பட உடனடி வேலைவாய்ப்புகள் கிடைக்கும் 29 வகையான படிப்புகள் இருக்கின்றன.

தற்போதைய நவீன வாழ்வியல் சூழலில் அதிகரித்துவரும் மன அழுத்தம் காரணமாக இன்னும் சில ஆண்டுகளில் ஒவ்வொரு நிறுவனத்திலும், பள்ளியிலும் ஒரு மனநல ஆலோசகர் தேவை என்ற நிலையை நோக்கி எடுத்துச் செல்கிறது. எனவே, பிஎஸ்சி சைக்காலாஜி (Psychology) படித்து பின்னர் அதில் முதுநிலை பட்டம் பெற்றால் சமூகத்தின் மேற்கண்ட சிக்கலை தீர்க்கக்கூடிய பெரிய வாய்ப்பு கிடைக்கும்.

பிஏ, பிஎஸ்சி, பி.காம், பிஇ உட்பட எந்த படிப்புகள் இருந்தாலும் M.Sc. Cognitive Science என்ற சைக்காலஜியும், நியுரோ சயின்சும் சேர்ந்த புதிய எதிர்காலமுள்ள படிப்புகளை கவனத்தில் கொள்ளலாம். மேலும், தற்போது அதிகரித்து வரும் குற்றங்களை கண்டுபிடிக்க தடயவியல் (Forensic Science) பெருமளவில் உதவியாக இருக்கிறது. அதற்கான மவுசு அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதுதவிர பி.டெக்பயாடெக்னலாஜி (Bio Technology), உணவு தொழில்நுட்பம் (Food Technology), பிஎஸ்சி ஊட்டச்சத்து (Nutrition and Diabetes) உள்ளிட்ட படிப்புகளுக்கும் மருத்துவத்துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகளவில் உள்ளன.

வணிகவியல்

வணிகவியல் மாணவர்கள் பெரும்பாலும் பி.காம் படிப்பை மட்டுமே விரும்புகின்றனர். பி.காம்., முடித்தபின் அடுத்த என்ன படிக்க போகிறோம் என்பதுதான் இங்கு முக்கியம். சிஏ, சிஎஸ், சிஎம்ஏ (CA, CS, CMA) உள்ளிட்ட துறை சார்ந்த படிப்புகளை தேர்வு செய்யலாம்.

பி.காம் படிப்புகளை உங்கள் ஊரில் உள்ள கல்லூரியில் படித்து, படிக்கும்போதே கேட் போட்டித் தேர்வுக்கு உங்களை தகுதி படுத்தி வந்தால் ஐ.ஐ.எம். (Indian Institute of Management) போன்ற இந்தியாவின் முன்னணி மேலாண்மை கல்வி நிறுனங்களில் மார்க்கெட்டிங், நிதி மற்றும் மனித வளம் ஆகிய துறைகளில் முன்னணி நிறுவனங்களின் உயர்பதவிகளில் பணியில் சேரவும், தொழில் தொடங்கவும் முடியும்.

சட்டம் படிக்க விரும்புகிறவர்கள் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் பிகாம் எல்எல்பி போன்ற 5 ஆண்டு சட்டப் படிப்பை படித்தால் நீதிமன்றம் சென்று வழக்காடலாம், சில ஆண்டுகளுக்குபின் நீதிபதியாக உயர்ந்து நிற்கலாம்.

இல்லையெனில் Company Law, Corporate Law, Intellectual Property Law, Space Law ஆகிய துறைகளில் சட்ட ஆலோசகராக செயல்படலாம். மேலும், B.Sc. Statistics, Actuarial Science படிப்புகளிலும் சிறந்த எதிர்காலம் உள்ளது.

கலை, அறிவியல்

கலை அறிவியல் படிப்புகளை தரம் குறைந்த படிப்பாக பார்க்கும் சூழல் நிலவுகிறது. ஆனால், நல்ல கல்லூரியில் பிஎஸ்சி கணிதம், வேதியியல், உயிரியல் போன்ற பொதுவான படிப்புகளை படித்து, முதுநிலை படிப்பை தேசிய உயர்கல்வி நிறுவனங்கள் அல்லது தமிழகத்திலேயே சிறந்த கட்டமைப்பு வசதியுள்ள கல்லூரிகளில் படித்தால் ஆராய்ச்சி பணியில் சேர்ந்து ஆரம்ப சம்பளமே ஒரு லட்சம் ரூபாயை தாண்டி பெறக்கூடிய வாய்ப்புகள் எல்லாம் இருக்கிறது.

இதுதவிர்த்து Digital Marketing, Interior Design, Tourism Management, Hotel Management, Journalism, Fashion Designing, Yoga உள்ளிட்ட வேலைவாய்ப்புகள் உள்ள படிப்புகளையும் மாணவர்கள் பரிசீலனை செய்யவேண்டும். கலை, ஓவியம், ஊடகத் துறையில் ஆர்வமுள்ளவர்கள் பிஎஸ்சி விஸ்காம், டிசைனிங், கிராபிக்ஸ் அன்ட் அனிமேஷன் படிப்புகளை தேர்ந்தெடுத்து சாதிக்கலாம்.

மொழி

திறன்மிக்க தமிழக இளைஞர்கள் இன்றைக்கு உலகம் முழுவதும் பணிபுரிந்து வருகின்றனர். பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்குகிறார்கள். இந்த சூழலில் B.A. Foreign Language என்ற படிப்பின் மூலம் ஜப்பான், பிரெஞ்சு, ஸ்பானிஷ் போன்ற அயல் நாட்டு மொழிகளை படித்தவர்கள் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் சிறந்த நிலையில் பணியாற்றுவதை நம்மால் பார்க்க முடிகிறது.

போட்டித் தேர்வுகள்

பிளஸ் 2 முடித்த பின் 75-க்கும் மேற்பட்ட போட்டித் தேர்வுகள் இந்திய அளவில் நடைபெறுகின்றன. நமது மாணவர்கள் நீட், ஜேஇஇ, நாட்டா போன்ற லட்சக்கணக்கான மாணவர்கள் மோதும் போட்டித் தேர்வுகளில் மட்டுமே கலந்து கொள்கிறார்கள்.

ஆனால், குறைந்த எண்ணிக்கையில் சில ஆயிரம் பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர். மாறாக என்சிஎச்எம் உட்பட இதர தேர்வுகளில் கவனம் செலுத்தினால் மிகவும் குறைவான கட்டணத்தில் மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் நம்மால் படிக்க முடியும். இவற்றில் பெரும்பாலான தேர்வுகளில் பிளஸ் 2 மதிப்பெண்னை கணக்கில் கொள்வதில்லை.

இன்றைக்கு தொழில் நிறுவனங்கள் என்ன படித்திருக்கிறோம் என்பதை விட, நம்மிடம் கூடுதலாக என்ன திறமை இருக்கிறது என்பதை வைத்துதான் நம்மை மதிப்பிடுகிறார்கள். அதனால் எந்தக் கல்லூரியில் எந்தப் பாடப்பரிவில் படித்தாலும், பாடத்திட்டத்தையும் தாண்டி துறை சார்ந்த திறமைகளை வளர்த்து கொண்டால் வாழ்வில் வெற்றி நிச்சயம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x