

சென்னை: அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களை தொகுப்பூதியத்தில், தற்காலிக அடிப்படையில் நிரப்ப பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கு கல்வியாளர்கள், பட்டதாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் 37,554 அரசுப் பள்ளிகளில் 52 லட்சம் மாணவர்கள் பயில்கின்றனர். 2.20 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். மாணவர் சேர்க்கை அதிகரிப்பு, புதிய பணி நியமனங்களை மேற்கொள்ளாதது உள்ளிட்ட காரணங்களால் அரசுப் பள்ளிகளில் 13,331 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்நிலையில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் அனுப்பிய சுற்றறிக்கை:
அரசுப் பள்ளிகளில் 4,989 இடைநிலை, 5,154 பட்டதாரி, 3,188 முதுநிலை ஆசிரியர் காலியிடங்களை பதவி உயர்வு மற்றும் தேர்வு வாரியம் மூலம் நிரப்பும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, மாணவர்களின் நலன் கருதி ஜூலை முதல் ஏப்ரல் வரை தொகுப்பூதியத்தில், தற்காலிகமாக பள்ளி மேலாண்மைக் குழு மூலம் பட்டதாரிகளை தேர்வு செய்து, ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். இடைநிலை ஆசிரியருக்கு மாதம் ரூ.7,500, பட்டதாரி ஆசிரியருக்கு ரூ.10,000, முதுநிலை ஆசிரியருக்கு ரூ.12,000 மதிப்பூதியம் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு கல்வியாளர்கள், பட்டதாரிகள் சமூக வலைதளங்கள் மூலம் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு முடிந்து 4 மாதங்கள் கடந்துவிட்ட சூழலில், தேர்வு முடிவு இன்னும் வெளியாகவில்லை. காலி பணியிடங்களை முன்கூட்டியே திட்டமிட்டு நிரப்பாமல், தற்காலிக அடிப்படையில் நியமிப்பது தவறு என்றும் புகார்கள் கூறப்படுகின்றன.