

சென்னை: இளநிலை பொறியியல் படிப்புகளில் இந்தாண்டு 1.5 லட்சம் மாணவர்கள் சேர வாய்ப்புள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் 400-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளில் உள்ள சுமார் 1.5 லட்சம் இடங்கள் ஆண்டுதோறும் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றைச்சாளர முறையில் நிரப்பப்படுகின்றன. இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் ஆகஸ்ட் 16 முதல் அக்டோபர் 14 வரை நடத்தப்பட உள்ளது.
இதற்கான விண்ணப்பப் பதிவு இணைய வழியில் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. இதுவரை 48 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தில் பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களுக்காக உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதை உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பொறியியல் கலந்தாய்வுக்கு மாணவர்கள் ஜூலை 19-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் இன்னும் வராததால் மாணவர் சேர்க்கை சற்று தாமதமாகிறது. எனினும், ஏற்கனவே திட்டமிட்டபடி பொறியியல் கலந்தாய்வு நடத்தப்படும். சிபிஎஸ்இ மாணவர்களுக்கு தேர்வு முடிவு வந்தபின் விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்படும்.
நடப்பு கல்வியாண்டு பாலிடெக்னிக் படிப்பில் நேரடி 2-ம் ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கி (ஜூன் 23) முதல் ஜூலை 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்தாண்டு பொறியியல் படிப்புகளில் 1.5 லட்சம் பேர் சேருவார்கள் என எதிர்பார்க்கிறாம். பொறியியல் படிப்புக்கு புதிய பாடத்திட்டங்களை வடிவமைக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளில் முதல் வாரத்தில் மாணவர்களுக்கு புத்துணர்ச்சி வகுப்புகள் நடத்தப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.