

சென்னை: மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எளிய முறையில் ஆங்கிலப் பேச்சு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அதன்படி 4 முதல் 9-ம் வகுப்பு வரை கற்று தரும் ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும்.
முதல்கட்டமாக முதன்மைக் கருத்தாளர்களுக்கு மாநில அளவிலான பயிற்சி கடந்த மே 30, 31-ம் தேதிகளில் வழங்கப்பட்டன. இதையடுத்து முதன்மைக் கருத்தாளர்கள் மூலம் இதர ஆசிரியர்களுக்கு வட்டார அளவில் ஜூன் 23, 24-ம் தேதிகளில் ஆங்கிலப் பேச்சு பயிற்சி வழங்கப்பட உள்ளது.
அரசுப் பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் மூலம் பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ளதால் அதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். இதுதொடர்பான நடவடிக்கைகளை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் விரைந்து முடிக்க வேண்டும்.