

சென்னை: தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் இன்றுதிறக்கப்படுகின்றன. சென்னைஅடுத்த புழல் அழிஞ்சியம்பாக்கத்தில் அரசு நடுநிலைப் பள்ளிக்கு வரும் மாணவர்களை வரவேற்கும் முதல்வர் ஸ்டாலின், ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று (ஜூன் 13) திறக்கப்படுகின்றன. இதற்கான முன்னேற்பாடுகள் முடிக்கப்பட்டு, முதல் நாளில் மாணவர்களை வரவேற்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், பள்ளிகள் திறந்தபிறகு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அனைத்து தலைமை ஆசிரியர்கள், முதல்வர்களுக்கு பள்ளிக்கல்வித் துறைஅறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன் விவரம்:
பள்ளிகள் திறக்கப்பட்டதும், 5, 8, 10, 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு தாமதமின்றி மாற்றுச் சான்றிதழ் அளிக்க வேண்டும். மற்ற வகுப்பு மாணவர்களின் பெற்றோர் தாமாக முன்வந்து மாற்றுச் சான்றிதழ் கோரினாலும் தாமதமின்றி வழங்க வேண்டும்.
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணிகளை ஜூன் 13-ம் தேதி (இன்று) முதல் தொடங்க வேண்டும். 8-ம் வகுப்பு வரையான மாணவர்களிடம் மாற்றுச் சான்று (டி.சி) இல்லாவிட்டாலும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இலவச கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சேர்க்கை பெற்ற குழந்தைகளையும் தனியார் பள்ளிகள்நிபந்தனையின்றி சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பள்ளி திறக்கப்படும் நாளிலேயே மாணவர்களுக்கு இலவச பாடநூல்கள், நோட்டுகளை வழங்கவேண்டும். முதல் 5 நாட்களுக்கு நல்லொழுக்கம், உளவியல் ரீதியான வகுப்புகள் மூலம் மாணவர்களுக்கு புத்துணர்வு பயிற்சி அளிக்க வேண்டும். அடுத்த வாரம் முதல் வழக்கமான பாடங்களை நடத்தலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, 8 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் கணிதத் திறனுடன், பிழையின்றி எழுதுவது, படிப்பதை உறுதிசெய்யும் விதமாக ‘எண்ணும், எழுத்தும்’ திட்டத்தை பள்ளிக்கல்வித் துறை வடிவமைத்துள்ளது. இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் அழிஞ்சியம்பாக்கம் அரசு நடுநிலைப் பள்ளியில் இன்று தொடங்கி வைக்கிறார். விடுமுறைமுடிந்து பள்ளிக்கு வரும் மாணவர்களையும் அவர் வரவேற்கிறார்.