Published : 12 Jun 2022 05:14 AM
Last Updated : 12 Jun 2022 05:14 AM

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை திறப்பு - மாணவர்களை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகள் தீவிரம்

சென்னை: கோடை விடுமுறை முடிந்து 1முதல் 10-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் நாளை (ஜூன் 13) திறக்கப்பட உள்ளன. முதல் நாளில் மாணவ, மாணவிகளை வரவேற்பதற்கான சிறப்பு ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

தமிழக பள்ளிக்கல்வித் துறையின்கீழ் இயங்கும் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கான கோடை விடுமுறை கடந்த மே 14-ம் தேதி தொடங்கியது. இந்த விடுமுறை காலத்தில் ‘இல்லம் தேடிக் கல்வி’ மையங்கள் வாயிலாக மாணவர்களுக்கு மாலை நேரங்களில் சிறப்பு வகுப்புகள் எடுக்கப்பட்டன.

இந்நிலையில் 1 முதல் 10-ம் வகுப்புகளுக்கு கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை (ஜூன் 13) திறக்கப்பட உள்ளன. இதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் முடிக்கப்பட்டு பள்ளிகள் திறப்புக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு

பள்ளி திறக்கப்படும் முதல் நாளில் மாணவர்களை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் அழிஞ்சியம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர் வரவேற்பு நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர்.

இதேபோல், அனைத்து மக்கள் பிரதிநிதிகள், துறைசார் அதிகாரிகள் தங்கள் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் சென்று வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. முதல் நாளிலேயே பாடநூல்கள், நோட்டுகள் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளன.

மேலும், வளாகத்தில் தூய்மைப் பணிகள், கட்டிடங்களின் உறுதிநிலை, மின்சார இணைப்புகள், கழிவுநீர்த் தொட்டிகள் மூடல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யவும் தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணிகளும் நாளை முதல் தொடங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

மாதிரி வேலை நேரம்

இதற்கிடையே, பள்ளிகளுக்கான மாதிரி வேலை நேரம் குறித்து பல்வேறு வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித் துறை நேற்று வெளியிட்டுள்ளது.

அதில், 1 முதல் 10-ம் வகுப்புகளுக்கு காலை 9.10 முதல் மாலை 4.10 மணி வரை வகுப்புகள் நடத்தலாம். இதேபோல் 11, 12- ம் வகுப்புகளுக்கு காலை 9 முதல் மாலை 4 மணி வரை வகுப்புகள் நடத்தலாம். இதில் முதல் 30 நிமிடம் காலை வணக்கம் கூட்டத்துக்கு ஒதுக்கப்பட வேண்டும். எனினும், பள்ளிகள் தங்களின் அமைவிடம் போக்குவரத்து வசதிகளைக் கருத்தில் கொண்டு வகுப்புகள் தொடங்கும் நேரத்தை முடிவு செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x