

தாம்பரம்: மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், ‘எண்ணும், எழுத்தும்’ திட்டத்தின் கீழ், செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 3-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு எண்ணும், எழுத்தும் தெரியவில்லை.
இதனால், பல குழந்தைகள் கல்வி கற்பதில் சிரமப்படுகின்றனர். அதுபோன்ற குழந்தைகளுக்கு கல்வி கற்றுத்தர வசதியாக மாநில கல்வி ஆராய்ச்சி மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயற்சி முகாம் நடத்தப்படுகிறது.
இது தொடர்பாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சுற்றறிக்கை அனுப்பியது. அதனடிப்படையில் செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.
பரங்கிமலை வட்டாரத்தில் அடங்கிய பல்லாவரம், தாம்பரத்தில் உள்ள ஆசிரியர்களுக்கான பயிற்சி கடந்த 6-ம் தேதி தொடங்கி 10-ம் தேதி வரை நடைபெற்று வருகிறது. முகாமின் இரண்டாம் நாளில், அஸ்தினாபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பயிற்சி நடத்தப்பட்டது. அதில், 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு எண்ணும், எழுத்தும் கற்பிக்கும் முறைகள் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சி முகாமை அரசு தேர்வுத் துறை இயக்குநர் சேதுராம வர்மா பார்வையிட்டார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஜெயலட்சுமி, வட்டார கல்வி அலுவலர் ஜூலியட் ஆகியோர் உடனிருந்தனர். முகாமில் கடைசி இரண்டு நாட்களில் ஆசிரியர்களுக்கு கற்றல் உபகரணங்கள் தயாரிக்கும் பயற்சி அளிக்கப்படும்.
இந்த பயிற்சி முகாமில் மாணவர்கள் தமிழ், ஆங்கில பாடங்களில் பிழையின்றி வாசிக்கவும், எழுதவும், கணித பாடத்தில் கணித அடிப்படை செயல்பாடுகளில் சிந்திக்கும் திறனை வளர்க்கவும்,
வாழ்வியல் திறனை மேம்படுத்தவும், பல்வேறு செயல்பாடுகளுடன் கருத்தாளர்கள் கற்பித்தல் உபகரணங்களை கொண்டு எளிமையான முறையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.