

சென்னை: ஆண்டு இறுதித் தேர்வு எழுதிய 9-ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி அளிக்க தமிழக பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டில் (2021-22) கரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டன. நிர்ணயிக்கப்பட்ட நாட்களைவிட பள்ளிகள் குறைந்த நாட்களே செயல்பட்டன. இதை கருத்தில்கொண்டு பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டங்களும் அதற்கேற்ப சற்று குறைக்கப்பட்டன. குறைக்கப்ப[ட்ட பாடத்திட்டத்தின்படியே 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டன.
தற்போது விடைத்தாள்களை திருத்தும் பணி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் மும்முரமாக நடந்து வருகிறது. விடைத்தாள் திருத்தும் பணிக்கு சரியாக வராத ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது. திட்டமிட்டபடி குறித்த காலத்துக்குள் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்பதில் தேர்வுத் துறை தீவிரம் காட்டி வருகிறது. இதனால், விடைத்தாள் திருத்தும் பணியில் ஆசிரியர்கள் முழு அர்ப்பணிப்புடன் ஈடுபடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், விடைத்தாள் மதிப்பீட்டிலும் மிகவும் கடுமை காண்பிக்காமல் தாராளமாக மதிப்பெண் வழங்குமாறு வாய்மொழியாக அறிவுரை வழங் கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் இறுதிக்குள் வெளியிடப்பட உள்ளன.
இதனிடையே, 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி ஆண்டு இறுதித் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன. அந்த மாணவர்களுக்கு மே 13-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. விடுமுறை முடிந்து வரும் 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக, ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கு தேர்ச்சி (ஆல் பாஸ்) வழங்கப்படும். அதன்படியே கடந்த கல்வி ஆண்டிலும் அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி அளிக்கப்பட உள்ளது.
இந்நிலையில், 9-ம் வகுப்பு இறுதித் தேர்வை எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி அளிக்க பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. மேலும், இறுதித் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மறுதேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு தேர்ச்சி அளிப்பது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தனித்தனியே சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர்.