

கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. கூடவே புற்றீசல் போல கோடைக்கால பயிற்சி முகாம்களும் களைக்கட்டத் தொடங்கிவிட்டன. கரோனாவால் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பள்ளிகள் செயல்படாத நிலையில் தேர்வுகளும் தள்ளிப் போயின. இதனால் கோடைக்கால பயிற்சி முகாம்கள் செயல்படத் தடை இருந்து வந்தது. இப்போது பள்ளிகள் தொடங்கி, தேர்வுகளும் நடந்து முடிந்துவிட்ட நிலையில் வண்ணமயமான கைப்பிரதி விளம்பரங்களோடு பயிற்சி முகாம்களும் களத்தில் குதித்து விட்டன.
கிராமங்களில் வசிக்கும் குழந்தைகள் விளையாடுவதற்குப் பரந்த வெளிகள் இருக்கும். மரத்தில் ஏறுவார்கள், வாய்க்காலில் விளையாடுவார்கள். பம்பு செட்டுகளில் குளிப்பார்கள். ஆனால் சென்னை போன்ற நகரங்களில் வளரும் குழந்தைகளுக்கு அப்படிப்பட்ட சூழல் கிடைப்பதில்லை. முன்பு காலியாக இருந்த மைதானங்கள் இப்போது கட்டடங்களாகக் காட்சியளிக்கின்றன. வீட்டில் அடைபட்டுக் கிடக்கும் குழந்தைகள் மொபைல் போன், வீடியோ கேம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்று நாள் முழுக்க ஏதேனும் ஒரு திரைக்கு அடிமையாகிச் சிறு வயதிலேயே கண்கள் பாதிப்பு, கவனச் சிதறல் போன்ற பிரச்சினைகளுக்கு ஆட்படுகின்றனர். இப்படிப்பட்டவர்களின் கவனத்தைத் திசை திருப்ப உருவான ஒன்றே கோடைக்கால பயிற்சி முகாம்கள்.
எதில் சேர்க்க வேண்டும்?
ஒவ்வொரு குழந்தைக்கும் வெவ்வேறு தனித்திறன்கள் இருக்கும். அதை நாம் முதலில் கண்டறிய வேண்டும். குழந்தைகளுக்கு விருப்பமில்லாத விளையாட்டுகள், பயிற்சிகளில் அவர்களை வற்புறுத்திச் சேர்க்கக் கூடாது. சில குழந்தைகளுக்கு நடனத்தில் ஆர்வமிருக்கும். அவர்களை கிரிக்கெட்டில் சேரச் சொல்லி வற்புறுத்தக்கூடாது. சிலர் ஓவியம் வரைவதில் கைதேர்ந்திருப்பார்கள், சிலருக்குக் கால்பந்து, டென்னிஸ் போன்ற விளையாட்டுகளிலும் சிலம்பம், கராத்தே, குத்துச்சண்டை போன்ற தற்காப்புக் கலைகளிலும் ஈடுபாடு காட்டுவார்கள். குழந்தைகளின் விருப்பத்தைத் தெரிந்துகொண்டு அதற்கேற்ற பயிற்சி முகாம்களில் அவர்களைச் சேர்க்க வேண்டும்.
பயிற்சி தொடர வேண்டும்
விடுமுறையைப் பயனுள்ளதாகக் கழிக்க வேண்டும் என்கிற ஒரே காரணத்துக்காக மட்டும் குழந்தைகளை இம்மாதிரி முகாம்களில் சேர்க்கக்கூடாது. இப்படிப்பட்ட எந்தப் பயிற்சிக்கும் கால வரையறையோ, முடிவோ கிடையாது. கற்றுக்கொண்டே இருப்பதுதான் ஒரே வழி. ஒரு மாத விடுமுறைக்குப் பிறகு பயிற்சியை விட்டுவிட்டால் அதில் எந்த பயனும் இருக்காது. பள்ளிகள் தொடங்கிய பின்னரும் இவற்றைத் தொடர முடியுமா என்று ஆராய்ந்த பின்பு பயிற்சிகளில் சேர்க்கலாம். பள்ளிப் படிப்போடு ஏதேனும் ஒரு கலையையோ, விளையாட்டையோ கற்றுக்கொள்வது பொழுதுபோக்குக்காக மட்டுமின்றி எதிர்காலத்தில் வேலை வாய்ப்புகளைப் பெறுவதில் ஒரு திறப்பாகவும் அவர்களுக்கு அமையும். யோகாசனம், ஸ்போக்கன் இங்கிலிஷ் போன்ற பயிற்சிகள் கல்வியைக் கடந்தும் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்துத் தரும்.
நூல்களை அறிமுகம் செய்யலாம்
கோடைக்கால பயிற்சி முகாம்களில் குழந்தைகளைச் சேர்க்க முடியாதவர்கள் அதற்காகக் கவலைகொள்ளத் தேவையில்லை. அதற்குப் பதிலாக நூல்களை அறிமுகம் செய்யலாம். அருகில் உள்ள நூலகங்களுக்கு அழைத்துச்செல்லலாம். அது புதியதொரு உலகத்தை அவர்களுக்கு அறிமுகப்படுத்தும். உங்கள் ஊரில் புத்தகக் காட்சிகள் ஏதேனும் நடைபெற்றால் குழந்தைகளை அங்கு அழைத்துச் செல்ல முயற்சி செய்யலாம். பிறந்த நாள் போன்ற நிகழ்வுகளுக்குப் புத்தகங்களை வாங்கிப் பரிசளிக்கலாம்.
உறவுகளைப் பலப்படுத்துங்கள்
கரோனா காலத்தில் வீட்டைவிட்டு வெளியே செல்லவே இயலாத சூழலில் குழந்தைகள் வளர்க்கப்பட்டனர். பக்கத்தில் இருக்கும் உறவினர் வீடுகளுக்குக் கூட செல்ல முடியாத நிலை இருந்தது. திருமணம், பிறந்த நாள் போன்ற நிகழ்வுகளில் அவர்களால் கலந்துகொள்ள முடியாமல் போனது. இப்போது அவர்களை உறவினர் வீட்டு நிகழ்வுகளுக்கு அழைத்துச் சென்று உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தலாம். மேலும் உயிரியல் பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள், மலைவாழிடங்களுக்கு கூட்டிச் செல்லலாம். இதன் மூலம் கோடை விடுமுறையைப் பயனுள்ள வகையில் கழித்ததுபோலவும் இருக்கும். அதுமட்டுமின்றி கல்வி சார்ந்த ஓர் அறிமுகத்தை அவர்களுக்கு அளித்ததுபோலவும் இருக்கும்.
மேலும் இதுபோன்ற விடுமுறை தினங்களில் குழந்தைகளை ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்கு அழைத்துச் சென்று அங்கே தனிமையில் வசிக்கும் குழந்தைகள், முதியவர்களுடன் கலந்து பழகும்படி செய்யலாம். பிற்காலத்தில் சமூகம் சார்ந்து அவர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனைகளை ஏற்படுத்தும்.
உங்கள் நேரமே முக்கியம்
எல்லாவற்றுக்கும் மேலாக, ஒரு மாதத்துக்கும் அதிகமாக வீட்டில் இருக்கப் போகிற குழந்தைகளுடன் நீங்கள் செலவு செய்யும் நேரமே அவர்களுக்குப் பெரிய தன்னம்பிக்கையைக் கொடுக்கும். உங்கள் ஓய்வு நேரத்தைக் குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். அது மட்டுமின்றி பயிற்சி முகாம்கள் என்கிற பெயரில் திடீரென்று முளைத்து பணத்தைக் கறக்கும் நிறுவனங்களை அடையாளம் கண்டு விலகுங்கள். குழந்தைகளைக் கட்டாயம் கோடைக்கால முகாமில் சேர்த்தாக வேண்டும் என்று நினைப்பவர்கள் அவர்களின் எதிர்காலத்துக்கு அந்தப் பயிற்சி முகாம்கள் பயன் அளிக்குமா என்பதையும் அறிந்த பின்பு அதில் சேர்த்து விடுங்கள்.