நீட் தேர்வுக்கு மே 20 வரை விண்ணப்பிக்கலாம்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

நீட் தேர்வுக்கு மே 20 வரை விண்ணப்பிக்கலாம்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை: நீட் தேர்வுக்கு மே 20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப்படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்தி வருகிறது.

2022-23-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு ஜூலை 17-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வுக்கு https://neet.nta.nic.in/ என்ற இணையதளம் மூலம் 14 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், ராணுவ நர்சிங் கல்லூரிகளில் பி.எஸ்சி. நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், அந்த மாணவர்கள் விண்ணப்பிக்க வசதியாக மே 15 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் மே 20-ம் தேதி வரை மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘நீட் தேர்வுக்கு மே 20-ம் தேதி இரவு 9 மணி வரை விண்ணப்பிக்கலாம். அன்றைய தினம் இரவு 11.50 மணி வரை கட்டணம் செலுத்தலாம். ராணுவ நர்சிங் கல்லூரிகளில் பி.எஸ்சி. நர்சிங் படிப்பில் சேரும் மாணவர்களுக்காக மீண்டும் ஒருமுறை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு 011-40759000 என்ற எண் மற்றும் neet@nta.ac.in என்ற இ-மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்” என்று கூறப்பட்டுள்ளது.

இதுவரை நாடு முழுவதும் 16 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in