Published : 14 May 2022 08:02 AM
Last Updated : 14 May 2022 08:02 AM

அமைச்சர் அறிவுறுத்தல்: சான்றிதழ் கட்டண உயர்வுவை திரும்ப பெற்ற அண்ணா பல்கலைகழகம்

சென்னை: தொலைந்துபோன சான்றிதழ்களை மீண்டும் பெறுவதற்கான கட்டண உயர்வை திரும்ப பெற்றுள்ள அண்ணா பல்கலைக்கழகம், பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் மதிப்பெண் சான்றிதழ்கள் தொலைந்தாலோ, சேதமடைந்தாலோ அதற்கு பதில் புதிய சான்றிதழ் வாங்குவதற்கு இதுவரை ரூ.300 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

கடந்த வாரம் இந்த கட்டணம் 10 சதவீதம் உயர்த்தப்பட்டது. அதோடு, பிற சான்றிதழ்களின் கட்டணமும் குறைந்தபட்சம் 60 சதவீதம் முதல் அதிகபட்சம் 400 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டது.

சான்றிதழ்களுக்கான கட்டணம் திடீரென பலமடங்கு உயர்த்தப்பட்டதால் மாணவர்கள், பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இது மாணவர்களை கடுமையாக பாதிக்கும் என்பதால், கட்டண உயர்வை அண்ணா பல்கலைக்கழகம் திரும்ப பெற வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்களும் வலியுறுத்தினர்.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த 10-ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, ‘‘சான்றிதழ்களுக்கான கட்டணத்தை உயர்த்த வேண்டாம். பழைய கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்படும்’’ என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், தொலைந்துபோன சான்றிதழ்களை மீண்டும் பெறுவதற்கான கட்டண உயர்வு திரும்ப பெறப்பட்டு, பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x