

செங்கல்பட்டு: கரோனா தொற்று காலத்தில் 1 முதல்8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால், அவர்களின் கற்றல் இழப்பு, கற்றல் இடைவெளியைப் போக்க, தமிழக அரசு, ‘இல்லம் தேடி கல்வி’ என்ற திட்டத்தை தன்னார்வலர்களை கொண்டு செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 4,780 மையங்களில் 80 ஆயிரம் மாணவர்கள் மாலை நேரங்களில் கல்வி பயின்று வருகின்றனர்.
இதில் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் 922 மையங்கள் உள்ளன. அதில் பழவேலி ஊராட்சியில் உள்ள இருளர் குடியிருப்பு பகுதியில் ஒரு தொடக்க நிலை மையமும்,ஓர் உயர் தொடக்க நிலை மையமும் செயல்பட்டு வருகிறது. அதேபோல் தண்டலம் ஊராட்சியில் 4 மையங்கள் உள்ளன.
இந்நிலையில் இந்திய குடிமைப் பணி பயிற்சி மையத்தில் பயிற்சி பெறும் 40 ஐஏஎஸ் அதிகாரிகள் செங்கல்பட்டு மாவட்டத்துக்கு வருகை புரிந்து இல்லம் தேடி கல்வித் திட்டத்தைப் பார்வையிட்டனர். அதில் ஒரு குழுவினர் பழவேலி குடியிருப்புப் பகுதிகளையும், மற்றொரு குழுவினர் தண்டலம் குடியிருப்புப் பகுதிகளையும் பார்வையிட்டனர். மாணவர்களின் தனித் திறமையையும் கற்றல் மேம்பாட்டையும் பாராட்டினர்.
பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குநர் சுதன், இல்லம் தேடிக் கல்வித் திட்ட சிறப்பு பணி அலுவலர் கே.இளம்பகவத் மற்றும் கல்வித்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.