கல்விக்கடன் | எந்தெந்த படிப்புகளுக்கு வங்கிகள் கடன் வழங்குகின்றன? - விரிவான வழிகாட்டுதல்

கல்விக்கடன் | எந்தெந்த படிப்புகளுக்கு வங்கிகள் கடன் வழங்குகின்றன? - விரிவான வழிகாட்டுதல்
Updated on
4 min read

இரண்டு ஆண்டுகள் ஆட்டிப்படைத்த கரோனா தாக்கம் குறைந்து பள்ளிகளில் ஆண்டு இறுதி தேர்வுகள் தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்து என்ன என்ற கேள்வி இப்போதே எதிரே வந்து நிற்கும். தேர்வு முடிவுகள் வந்ததும் என்ன படிப்பு படிக்கலாம், எந்த கல்லூரியில் சேரலாம் என மாணவர்கள் மனம் கணக்குப்போட, அவர்களது பெற்றோர்க்கு கல்விக்கட்டணம் குறித்த கவலை புளியை கரைக்கத் தொடங்கியிருக்கும். உயர் கல்வி எல்லா மாணவர்களுக்கும் சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்தில் அரசும், ரிசர்வ் வங்கியும் கல்விக்கடன் வழங்கி வருகின்றன. எந்தெந்த படிப்புகளுக்கு கல்விக்கடன்கள் வழங்கப்படுகின்றன. கல்விக்கடன் பெற மாணவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று விளக்கம் தருகிறார் எழுத்தாளரும், பஞ்சாப் நேஷனல் வங்கியின் முன்னாள் பொதுமேலாளருமான குறள் இனிது சோம.வீரப்பன்...

நம்மில் பலருக்கும் கல்விக்கடனுக்கு எந்த வங்கியை எப்படி அணுகுவது என்பது குறித்து பல சந்தேகங்கள் இருக்கின்றன. கல்விக்கடன்கள் குறித்து இந்திய வங்கிகள் கூட்டமைப்பு ஒரு பொது வழிகாட்டி நெறிமுறைகளை வழங்கியுள்ளது. அதன்படி, இந்தியக் குடிமகன்கள் அனைவரும் கல்விக்கடன் பெற தகுதி உடையவர்களே. அப்படியானால் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் கல்விக்கடன் பெற முடியாத என்றால் இந்தியா பாஸ்போர்ட் வைத்திருக்கும் வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் கல்விக்கடன் பெற முடியும். கல்விக்கடன் பெறும் போது வங்கி கடன் பெறுவருடன் ஒப்பந்தம் செய்து கொள்ளும் என்பதால், சட்டப்படி ஒப்பந்தம் செய்ய 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். அப்படியானவர்கள் பெற்றோருடன் சேர்ந்து கடனைப் பெறுவர். அப்படியானால் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு கல்விக்கடன் கிடைக்காதா என்றால் கிடைக்கும், மைனருக்கு பதிலாக அவரது பெற்றோர் கடனைப் பெறுவர். கல்விக்கடன் பெறுவதற்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது.

கல்லூரி சேர்க்கைக்கு அனுமதி பெற்றவர்களுக்கு கல்விக்கடன் கிடைக்கும். ஆனால் அந்த கல்வி நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டவையாக இருக்க வேண்டும். பன்னிரெண்டாம் வகுப்பிற்கு பின்னர், நுழைவுத் தேர்வில் மெரிட்-ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வங்கிக்கடன் பெறுபவர்கள் கடன் பெற கல்லூரியில் கொடுக்கும் சேர்க்கைக் கடிதத்தை வங்கிக்குத் தரவேண்டும். இன்னும் சேர்க்கைக் கடிதம் கிடைப்பெறாத பட்சத்தில், அதற்கு முந்தைய தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பட்டியல் இனத்தவர்கள் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

எந்த எந்த படிப்புகளுக்கு கடன் வழங்கப்படும்: எல்லா இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கும் கல்விக்கடன் வழங்கப்படுகிறது. இவைத் தவிர தொழிற்படிப்புகள். பொறியியல், மருத்துவம், விவசாய படிப்புகள், கால்நடை மருத்துவம், சட்டப் படிப்புகள், பல் மருத்துவம், மேலாண்மைப் படிப்புகள், கணினி படிப்புகள் ஆகியவைகளுக்கும் மற்ற தொழில் படிப்புகளான ஐசிடபிள்யூஏ, சிஏ, சிஎஃப்ஏ, கம்பெனி செக்ரட்ரிஷிப் போன்ற படிப்புகளுக்கும் கல்விக்கடன் பெற முடியும். இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ஐஏஎஸ்சி, என்ஐஎஃப்டி போன்றவைகளில் படிப்பதற்கும், இவைத் தவிர பட்டையப் படிப்புகளுக்கும் கல்விக்கடன் வழங்கப்படுகிறது.

ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங், பைலட் டிரைனிங், ஷிப்பிங் படிப்புகளுக்கும் கல்விக்கடன் வழங்கப்படுகிறது. ஆனால் அந்த படிப்புகள் டைரக்டர் ஜெனரல் ஆப் சிவில் ஏவியேசன் அல்லது ஷிப்பிங் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் நடத்தும் படிப்புகளுக்கும் கல்விக்கடன் வழங்கப்படுகிறது. அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்கள் நடத்துகிற மாலைநேர கல்விகளில் படிப்பதற்கும் கல்விக்கடன் பெற முடியும். யுஜிசி, ஏஐசிடிஇ , ஐசிஎம்ஆர் போன்ற நிறுவனங்கள் அங்கீகரித்துள்ள படிப்புகளுக்கும் கல்விக்கடன் வழங்கப்படுகிறது.

பொது செவிலியர் படிப்புகள், மிட்வைஃபரி (Midwifery) போன்ற படிப்புகளுக்கும் கல்விக்கடன் உண்டு. அந்த படிப்புகள் இந்தியன் நர்சிங் கவுன்சிலின் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். சில நேரங்களில் குறிப்பிட்ட வங்கிகள், குறிப்பிட்ட கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கி, அந்த நிறுவனங்களில் சேர்பவர்களுக்கு கல்விக்கடன் வழங்குகின்றன. ஏர்கிராஃப்ட் மெயின்டெனன்ஸ் இன்ஜினியரிங், வொகேஷனல் கோர்ஸ், ஸ்கில் கோர்ஸ், ஆப் கேம்பஸ் கோர்ஸ் படித்தால் வங்கிக்கடன் கிடைக்காது.

என்னென்ன வகைகளுக்கு கடன் வழங்கப்படுகிறது: கல்விக்கட்டணத்திற்கு கடன் வழங்கப்படும். விடுதிக் கட்டணம், சாப்பாடு மற்றும் தங்குமிடத்திற்கான கட்டணம், நூலக கட்டணம், ஆய்வகக்கட்டணம் போன்றவைகள் கல்விக்கட்டணங்களில் அடங்கும். கல்விக்கடன் திட்டத்தில் கடன் பெறுபவருக்கு ஒரு ஆயுள் காப்பீடு எடுக்க வேண்டும், அந்த காப்பீட்டிற்கான தவணைக்கும் கல்விக் கடன் வழங்கப்படுகின்றன. மூலதனக் கட்டணத்திற்கு வங்கிக்கடன் வழங்கப்படமாட்டாது. அதே போல கல்விக்கட்டணம் அரசு நிர்ணயித்துள்ள முறையில் இருக்க வேண்டும். அதற்கு அதிகமாக இருந்தால் அரசு நிர்ணயித்துள்ள கல்விக்கட்டணத்தையே வங்கிகள் கடனாக வழங்கும்.

எவ்வளவு கடன் கிடைக்கும்: சாதாரணமாக இந்தியாவில் ரூ. 10 லட்சம் வரைக்கும் கல்விக்கடன்கள் வழங்கப்படுகின்றன. இதில் கல்விக் கட்டணம் தவிர்த்த, விடுதிக் கட்டணம், நூலக கட்டணம் போன்ற இதரக் கட்டணங்கள் மொத்த தொகையில் 50 சதவீதத்திற்கு அதிகமாக இருக்கக்கூடாது. கல்விக்கட்டணம் பெறும் போது அனைவருக்கும் வரும் மற்றொரு சந்தேகம் ஒரு குடும்பத்தில் எத்தனை பேர் கல்விக்கடன் பெற முடியும்?. கல்விக்கடன் என்பது தனி நபருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. அதனால் ஒரே குடும்பத்தில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கும் கல்விக்கடன் கிடைக்கும். அதே போல இளநிலை படிப்பதற்கு கல்விக்கடன் வாங்கியிருக்கும் ஒருவர், மேல்படிப்பு படிக்க விரும்பி இரண்டாவது முறை கல்விக்கடனுக்கு விண்ணப்பித்தால் அவருக்கும் கல்விக்கடன் வழங்கப்படும்.

மார்ஜினும் வட்டியும்: எல்லா கடன்களுக்கும் மார்ஜின் என்பது முக்கியம். கல்விக்கடனில் மார்ஜின் தொகை செலுத்த வேண்டும். ஆனால் இந்த வகைக் கடனில் ஒருவர் ரூ.4 லட்சம் வரை கடன் பெரும் போது அவர் மார்ஜின் தொகை செலுத்த வேண்டியது இல்லை. ரூ.4 லட்சத்திற்கு மேல் கடன் வாங்கும் போது 5 சதவீதம் மார்ஜின் தொகை செலுத்த வேண்டும். கடன் பெறுவருக்கு கல்வி உதவித் தொகை ஏதாவது கிடைக்கும் என்றால் அந்த தொகையை மார்ஜினாக வங்கி எடுத்துக்கொள்ளும். இந்த மார்ஜின் தொகையை நீங்கள் மொத்தமாக செலுத்த வேண்டியது இல்லை. பணம் பொறும்போது மட்டும் அதற்கு ஏற்ற வகையில் மார்ஜின் தொகையை செலுத்தினால் போதும்.

கல்விக்கடனுக்கான செக்கியூரிட்டிக்கு மத்திய அரசாங்கம் கிரெடிட் கேரண்டி ஃபண்டு என்ற திட்டம் வைத்திருக்கிறார்கள். கடன் தொகை ரூ. 7.5 லட்சத்திற்கு மேல் சென்றால் கொலாட்ரல் செக்யூரிட்டி தரவேண்டியது இருக்கும். இதில் விவசாய நிலங்களை செக்யூரிட்டியாக வழங்க முடியும். ரூ. 7.5 லட்சத்திற்கு மேல் கடன் வாங்கும் போது, முழு தொகைக்கு செக்யூரிட்டி வழங்க வேண்டும். அப்படி வழங்கும் செக்கியூரிட்டியில் வீடு, நிலங்களை சந்தை மதிப்பிற்கும், பங்குகளை சந்தை மதிப்பிலிருந்து பாதி மதிப்பிற்கும் வங்கி எடுத்துக் கொள்ளும்.

எந்த வங்கியை அணுகலாம்: கல்விக்காக கடன் வாங்கும் போது கேள்வி எல்லோருக்கும் வரும் கேள்வி எந்த வங்கியை எப்படி அணுக வேண்டும். அவ்வாறான சூழலில் வீட்டிற்கு அருகில் இருக்கும் வங்கியைத் தான் கல்விக் கடனுக்காக அணுக வேண்டும். கிராமங்களில், சின்ன ஊர்களில் இருப்பவர்கள் அருகில் இருக்கும் நகரங்களில் உள்ள வங்கியை அணுகி கல்விக்கடன் பெறலாம். கடனுக்காக விண்ணப்பிக்க போகும் போது, உரிய ஆவணங்களைக் கொண்டு செல்ல வேண்டும் அதாவது, கல்லூரி சேர்க்கைக் கடிதம், தற்போது சேரப் போகும் வகுப்பிற்கு முன்பு நடந்த தேர்வு மதிப்பெண் சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை, மின்னஞ்சல் முகவரி, அலைபேசி எண், சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் போன்ற ஆவணங்கள், மடிக்கணினி போன்ற பொருள்கள் வாங்க வேண்டியது இருந்தால் அதற்கான கோட்டேஷன், மூன்று புகைப்படம் போன்றவை தரவேண்டும்.

கல்விக்கடன் விண்ணப்பங்களுக்கு 15 லிருந்து 30 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். மாணவர்களுக்கு கடன் பெற தகுதி இருந்தால் கல்விக்கடன் வழங்கப்படும். பொதுவாக குறைவான மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடையாதவர்களுக்கு கல்விக்கடன் வழங்கப்படுவதில்லை. நியாயமான காரணங்களுக்காக மட்டுமே விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும்.

கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம்: படித்து முடித்தவுடன் வேலை கிடைக்கும் வரையில் கொஞ்சம் சலுகை வழங்கப்படும். வேலை கிடைத்த பின்னர் கடனைத் திருப்பிச் செலுத்தும் கால அவகாசம் 15 ஆண்டுகள். படிக்கும் போது எளிய வட்டியை கணக்கிட படுகிறது. வட்டிக் மேல் வட்டி வசூலிக்கப்படுவதில்லை. அசலுக்கு மட்டுமே வட்டி கணக்கிடப்படுகிறது. வட்டி விகிதம் மிகவும் குறைவு, சாதாரணமாக 8.80 லிருந்து, 10.05 சதவீதம் வரை வரும். இந்த வட்டி வீதம் சில வங்கிகளில் மாறுபடலாம். ரூ. 4 லட்சம் வரை ஒரு வட்டியும், ரூ.7 லட்சம் வரையில் ஒரு வட்டியும் அதற்கு மேல் ஒரு வட்டியும் என வைத்திருக்கின்றன.

கல்விக்கடன் என்பது, ஏழை எளிய மாணவர்கள் அனைவருக்கும் கல்வி போய் சேர வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு வழங்கப்படுகிறது. அதனால் கடனில் படிக்கிறோம் என்ற எண்ணத்தில் நன்றாக படித்து, வேலைக்குச் சென்று கடனைத் திருப்பிச் செலுத்துங்கள். வாழ்த்துகள்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in