

சென்னை: நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் 2022-23 கல்வி ஆண்டு முதல் இளநிலை, முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கு பொது நுழைவுத் தேர்வு (சியுஇடி) கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்த ஆண்டுக்கான சியுஇடி தேர்வு ஜூலை முதல் வாரத்தில் தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) மூலம் தமிழ், இந்தி உட்பட 13 மொழிகளில் கணினி வழியில் நடத்தப்பட உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த ஏப்.7-ல் தொடங்கி மே 6-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதுவரை இத்தேர்வுக்கு 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
தற்போது இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் மே 22-ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ள மாணவர்கள் https://cuet.samarth.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை https://nta.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம். சந்தேகம் இருந்தால் 011-40759000/ 69227700 ஆகிய தொலைபேசி எண்கள் மூலமாகவோ, cuet-ug@nta.ac.in என்ற மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.