

ராய்ப்பூர்: பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் ஹெலிகாப்டரில் ரைடு அழைத்துச் செல்லப்படுவார்கள் என சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் தெரிவித்துள்ளார்.
அந்த மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. 60 வயதான அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகேல், தொகுதி வாரியாக பொதுமக்களை சந்தித்து வருகிறார். அடுத்த ஆண்டு அந்த மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதன் ஒரு பகுதியாகவே முதல்வரின் இந்தப் பயணம் பார்க்கப்படுகிறது.
இந்த பயணத்தை அவர் நேற்று தொடங்கிய நிலையில், ராஜ்பூரில் பொதுமக்களை இன்று சந்தித்து பேசினார். தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த ஹெலிகாப்டர் ரைடு குறித்த அறிவிப்பை அவர் பகிர்ந்தார்.
"வானூர்தியில் பயணிக்க வேண்டுமென எல்லோரும் விரும்புவார்கள். ஹெலிகாப்டரில் ரைடு போவது மாணவர்களின் மனதில் வாழ்க்கையில் உயர பறக்க வேண்டும், உயர்ந்த லட்சியங்களை அடைய வேண்டும் என்ற ஆசையை வளர்க்கும் என நான் நம்புகிறேன்.
இந்த தனித்துவமான ஊக்கம் வெற்றிக்காக அவர்கள் காட்டும் முனைப்பைக் கூட்டும் என நம்புகிறேன். மாநில மற்றும் மாவட்ட வாரியாக அதிக மதிப்பெண் பெறும் முதல் 10 மாணவர்கள் ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்லப்படுவார்கள்" என்றார். விரைவில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என தெரிகிறது.