Published : 03 May 2022 05:59 AM
Last Updated : 03 May 2022 05:59 AM

வரும் 5-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முன்னேற்பாடுகள் தீவிரம்: வினாத்தாள்கள் காப்பு மையங்களை சென்றடைந்தன

பிளஸ் 2 பொதுத்தேர்வு வருகிற 5-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில் தேர்வுக்கான முன்னேற்பாடுகள் பள்ளிகளில் நடைபெற்று வருகின்றன. சென்னை அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மையத்தில் நேற்று தேர்வுக்கூட இருக்கைகளில் பதிவு எண்களை எழுதும் பணியில் ஈடுபட்ட ஆசிரியைகள். படம்: பு.க.பிரவீன்

சென்னை: பிளஸ் 2 பொதுத்தேர்வு வருகிற 5-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வினாத்தாள் கட்டுகள் அந்தந்த மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள காப்பு மையங்களை ஞாயிற்றுக்கிழமை சென்றடைந்தன.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மே 5-ம் தேதியும் பிளஸ் 1 பொதுத்தேர்வு மே 10-ம் தேதியும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6-ம் தேதியும் தொடங்குகின்றன. பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் ஏப்ரல் 25-ம் தேதி தொடங்கி நேற்று முடிவடைந்தன. பிளஸ் 2 தேர்வை 8 லட்சத்து 37,317 மாணவர்களும் பிளஸ் 1 பொதுத்தேர்வை 8 லட்சத்து 83,884 பேரும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 9 லட்சத்து 56,474 பேரும் எழுதுகின்றனர்.

முதலில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்க இருப்பதால் அதற்கான முன்னேற்பாடுகளை அரசு தேர்வுத் துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. வினாத்தாள் கட்டுகள் சென்னையில் இருந்து தனி வாகனங்களில் போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு அந்தந்த மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள காப்பு மையங்களை சென்றடைந்தன. அங்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு 24 மணி நேரமும் போடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பள்ளி தேர்வு மைய தேர்வுக் கூடங்களில் மாணவர்களின் பதிவெண்களை எழுதும் பணி தமிழகம் முழுவதும் ஏராளமான பள்ளிகளில் நடந்தது. ஒவ்வொரு பெஞ்சிலும் இடைவெளி விட்டு 2 மாணவர்கள் அமர்ந்து தேர்வெழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் அசோக் நகர் மற்றும் பெரம்பூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையம் உட்பட பல்வேறு மையங்களில் இப்பணியில் ஆசிரியர்கள் மும்முரமாக ஈடுபட்டனர்..

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x