Last Updated : 02 May, 2022 07:02 AM

 

Published : 02 May 2022 07:02 AM
Last Updated : 02 May 2022 07:02 AM

‘முறையான திட்டமிடல், கடின உழைப்பு இருந்தால் வெற்றி எளிது’ - ‘இந்து தமிழ் திசை' நாளிதழ், சங்கர் ஐஏஎஸ் அகாடமி சார்பில் ‘ஆளப் பிறந்தோம்' வழிகாட்டு நிகழ்ச்சி

திருச்சியில் நேற்று நடைபெற்ற ‘ஆளப் பிறந்தோம்' வழிகாட்டு நிகழ்ச்சியில் பேசுகிறார் மத்திய மண்டல ஐ.ஜி வே.பாலகிருஷ்ணன். உடன், கரூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர், ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரி தலைமை செயல் அலுவலர் கு.சந்திரசேகரன், ‘இந்து தமிழ் திசை' முதன்மை உதவி ஆசிரியர் செல்வ புவியரசன், சங்கர் ஐஏஎஸ் அகாடமி மூத்த பயிற்றுநர் சந்துரு.

‘இந்து தமிழ் திசை' நாளிதழ், 'சங்கர் ஐஏஎஸ் அகாடமி'யுடன் இணைந்து நடத்திய யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வெழுதுவோருக்கான ‘ஆளப் பிறந்தோம்' என்ற வழிகாட்டு நிகழ்ச்சி திருச்சி மதி இந்திராகாந்தி கல்லூரியில் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மத்திய மண்டல ஐ.ஜி வே.பாலகிருஷ்ணன் பேசியது: இந்திய குடிமைப்பணி என்பது மாற்றத்தைக் கொண்டு வரக்கூடிய ஒரு பணி. ஒரு காலத்தில் உயர்தட்டு மக்கள் மட்டுமே பெறக்கூடிய நிலையில் இருந்த குடிமைப்பணி தற்போது ஓபிசி, எஸ்சி, எஸ்டி என அனைத்து தரப்பு மக்களும் பெறக்கூடிய நிலையை எட்டியுள்ளது. அதேபோல கிராமத்திலிருந்தும் நிறைய மாணவர்கள் வெற்றி பெறுகின்றனர். பிறக்கும்போது அனைத்து குழந்தைகளும் சம அளவு மூளையுடன் பிறக்கின்றன. ஆனால் வளரும்போது எடுக்கக்கூடிய பயிற்சி, முயற்சியைப் பொறுத்தே நமக்கு அனைத்து திறமைகளும் கிடைக்கின்றன.

இத்தேர்வுக்கு தயாராகும் நபர்கள் பொது அறிவு, புவியியல், வரலாறு, தகவல் தொடர்பு, அரசியலமைப்பு சட்டம் போன்றவை குறித்து நன்றாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஒரே சமயத்தில் பல்வேறு பிரச்சினைகள் வந்தால், அதை சமாளிக்க தயாராக இருக்க வேண்டும். எந்த சூழலிலும் தெளிவான முடிவெடுக்கும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். எந்த ஒரு பாடத்தையும் கடமைக்காக படிக்காமல், முழு ஈடுபாட்டுடன், இலக்கு நிர்ணயித்து படிக்க வேண்டும்.

குறிப்பெடுத்து படித்தால், மீண்டும் திருப்பிப் பார்க்கும்போது எளிதில் புரியும். குழுவாக இணைந்து படித்தால் கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளலாம். நேர மேலாண்மை மிக முக்கியம். வெற்றி என்பது அனைவருக்கும் எளிதில் கிடைக்கக்கூடியது. பயிற்சியின் மூலம் எந்த திறமையையும் வளர்த்துக் கொள்ளலாம். முறையான திட்டமிடலும், கடின உழைப்பும் இருந்தால் குடிமைப்பணி தேர்வுகளில் எளிதில் வெற்றி பெறலாம் என்றார்.

வழிகாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களில் ஒருபகுதியினர்.

யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை எளிதில் கையாளுவது குறித்து ‘இந்து தமிழ் திசை' முதன்மை உதவி ஆசிரியர் செல்வ புவியரசன், சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் மூத்த பயிற்றுநர் சந்துரு ஆகியோர் விளக்கமளித்தனர்.

இந்நிகழ்வில், ‘இந்து தமிழ் திசை' நாளிதழின் பொது மேலாளர்கள் டி.ராஜ்குமார் (விற்பனை), எஸ்.வெங்கட் சுப்பிரமணியன் (விளம்பரம்) உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக, ஸ்ரீமதி இந்திராகாந்தி மகளிர் கல்லூரி தலைமை செயல் அலுவலர் கு.சந்திரசேகரன் வரவேற்றார். நிகழ்ச்சியை ‘இந்து தமிழ் திசை' முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேசன் ஒருங்கிணைத்தார். இந்நிகழ்ச்சியில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் அதிகளவில் பங்கேற்றனர்.

‘கிராமப்புற மாணவர்களுக்கு நல்ல வாய்ப்பு’

குளித்தலை க.கலைவாணி: திட்டமிடலின் அவசியம் குறித்து நன்றாக விளக்கினர். என்னைப்போல கிராமத்திலிருந்து வந்தவர்களுக்கு நல்வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த ‘இந்து தமிழ் திசை' நாளிதழ், சங்கர் ஐஏஎஸ் அகாடமிக்கு நன்றி.

‘நேர மேலாண்மையை அறிந்து கொண்டேன்'

திருச்சி சொ.ராஜேஷ்: யுபிஎஸ்சி தேர்வுக்கு ஓராண்டாக தயாராகி வருகிறேன். தேர்வில் வெற்றி பெற நேர மேலாண்மை முக்கியம் என்பதை இந்நிகழ்ச்சி மூலம் அறிந்து கொண்டேன்.

‘தேர்வுக்கு தயாராக பேருதவியாக இருந்தது'

பெரம்பலூர் ஆர்.எல்.நித்யஸ்ரீ: டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளேன். தேர்வுக்கு தயாராக இந்நிகழ்ச்சி பேருதவியாக இருந்தது. யுபிஎஸ்சி தேர்வுகள் குறித்தும் தெளிவாக தெரிந்து கொள்ள முடிந்தது.

‘தன்னம்பிக்கை ஏற்படுத்திய நிகழ்ச்சி’

தென்காசி வெ.கலைச்செல்வன்: போட்டித் தேர்வுகளை கையாளும் விதம் குறித்து எங்களுக்கு புரியும் வகையில் தமிழில் எளிமையாக விளக்கினர். என்னாலும் வெற்றி பெற முடியும் என்ற தன்னம் பிக்கையை இந்நிகழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

`செய்தித்தாள் வாசிப்புக்கு முக்கியத்துவம்’

கரூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் போட்டித் தேர்வுக்கு தயாராகும் வழிமுறைகள் குறித்து திரைக்காட்சி வாயிலாக விளக்கம் அளித்து, பேசியது: இந்திய குடிமைப்பணி தேர்வைத்தான் நாட்டிலேயே கடினமான தேர்வு என்கின்றனர்.

ஆனால், உண்மையிலேயே மிக எளிதான தேர்வும் இதுதான். வயது, பாலினம், உடற்குறை தடையல்ல. ஆங்கிலப் புலமை தேவையில்லை. தாய்மொழியிலும் எழுதலாம். கல்வி மதிப்பெண், குடும்ப பின்புலம் பொருட்டல்ல. எவ்வித பாரபட்சமுமின்றி நேர்மையாக நடத்தப்படும் தேர்வுகளில் இதுவும் ஒன்று. தேர்வுகளில் வெற்றி பெற முறையான திட்டமிடலுடன்கூடிய கடின உழைப்பு அவசியம்.

செய்தித்தாள்களை வாசிக்காமல் போட்டித்தேர்வுகளை எழுதவே முடியாது. நான் தேர்வுக்கு தயாராகிய காலத்தில் இந்து நாளிதழ் எனக்கு மிகச் சிறந்த ஆசிரியராக விளங்கியது. எனவே தேர்வுக்கு தயாராகும் நபர்கள், செய்தித்தாள் வாசிப்புக்கு முக்கியத்தும் கொடுக்க வேண்டும்.

`தி ஹிந்து' ஆங்கில நாளிதழ், ‘இந்து தமிழ் திசை' நாளிதழ்களை அவசியம் வாசிக்க வேண்டும். வாழ்க்கையில் வெற்றி பெற இலக்கை பெரிதாக நிர்ணயித்துக் கொள்ள வேண்டும், சுய மதிப்பீடு செய்து கொள்ள வேண்டும். இலக்கை நோக்கிய பயணத்துக்காக முயற்சிக்க வேண்டும், இலக்கை அடைந்த பிறகு பிறருக்கு வழிகாட்ட வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x