Published : 30 Apr 2022 12:22 PM
Last Updated : 30 Apr 2022 12:22 PM

போட்டித்தேர்வு தொடர் 07: காரணத்தோடு தேடு!

போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும் பகுதி - 07

எந்த போட்டித் தேர்வையும் வெல்வது எளிதான ஒன்று. காரணத்தோடு குறிப்பிட்ட சில அம்சங்களை புரிந்துகொண்டு நாம் தயாரானால், நிச்சயம் நமக்கு வெற்றி கிட்டும். அப்படி காரணத்தோடு எதைத் தேடுவது? நான் முன்பு குறிப்பிட்டது போல, பொது அறிவின் 5 பிரிவுகளில் முக்கியமானது இந்திய அரசியலமைப்பு பற்றிய அறிவு.

இந்திய அரசியலமைப்பு அறிவு எதற்கு?

இந்திய அரசியலமைப்பு பற்றிய அறிவு வெறுமேனே படிப்பதோடு முடிந்துவிடுவது அல்ல. என்றாவது ஒரு நாள் நாம் அரசாங்க வேலையில் பணியாற்றக்கூடிய நிர்ப்பந்தம் அல்லது சூழ்நிலையில், இந்தியஅரசியல் அறிவை தெரிந்துகொள்வதோடு, புரிந்துகொண்டு, அதை செயல்முறைப்படுத்த வேண்டிய சூழலும் வரலாம்.

குரூப்-1 தேர்வு மூலம் ஆட்சியர் பணி, குரூப்-2 தேர்வு மூலம்மேற்பார்வையாளருக்கு நிகரான வேலை, குரூப்-4 தேர்வு மூலம்கிளரிக்கல் வேலை என இந்த மூன்று நிலைகளிலும் அரசியலமைப்பு குறித்த அறிவை நம் அன்றாட அலுவலக வாழ்க்கையில் பயன்படுத்தக்கூடிய சூழல் வரும். அதனால், அதுபற்றி தெரிந்துகொள்வதும் மிகவும் அவசியம்தானே!

இந்திய அரசியலமைப்பு அறிவை காரணத்தோடு நாம் எந்த புத்தகத்தில் தெரிந்துகொள்வது?

மூன்று வகையான புத்தகங்கள்

1. முதல் நூல்கள் (Standard Books)

2. வழி நூல்கள் (Guide)

3. மேற்கோள் நூல்கள் (Refernce Books)

நான்காவதாக இந்திய அரசியலமைப்பு தொரடர்பான இணையதளங்கள் எவை என்பதையும் பார்க்கலாம்.

முதல் நூல்கள்

முதல் நூல்கள் (Standard Books) என்பது பெரும்பாலும் கேட்கக்கூடிய குறிப்பான கேள்விகள் அடங்கியது. அரசியலமைப்பு அறிவைதெரிந்துகொள்ளும்போது அசல் (Original) புத்தகத்தில் இருந்து தெரிந்துகொள்வது அவசியம். அப்படி தெரிந்துகொள்ளும்போது ‘இந்திய அரசியலமைப்பு ஓர் அறிமுகம்’ - (Introduction to Constitution of India ) டி.டி.பாசு எழுதியநூல் ஆங்கிலத்தில் மிக அடிப்படையான முதல் நூல் (Standard Book) ஆகும்.

‘‘யுபிஎஸ்சிக்கு என்சிஇஆர்டி (NCERT) புத்தகங்களும், டிஎன்பிஎஸ்சிக்கு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் (SCERT) வெளியிட்டுள்ள புத்தகங்களும் எந்த அளவுக்கு முக்கியம்?’’ என்று பலரும் என்னிடம் கேட்கின்றனர்.

என்சிஆர்டி (NCERT) 9, 10, 11, 12-ம் வகுப்பு சமூக அறிவியல் சார்ந்த பாடப் புத்தகங்கள் மூலம் அடிப்படை அரசியலமைப்பு மட்டுமின்றி, இந்திய அரசியல் வரலாறுஎன எல்லாவற்றையும் நிச்சயம் தெரிந்துகொள்ளலாம். இதில் இருக்கக்கூடிய அத்தனை தகவல்களும் முதல் நூலில் (Standard book) இருந்து எடுக்கப்பட்டவை ஆகும். அதனால்தான் மிக முக்கியமான அடிப்படை அறிவுத் தொகுப்பாக என்சிஇஆர்டி புத்தகங்கள் உள்ளன.

இதுபோலதான் டிஎன்பிஎஸ்சிக்கு 10, 11, 12-ம் வகுப்பு பாடப் புத்தகங்கள். 10-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் 4 முதல் 9 அலகுகள் (Chapters) வரை இந்தியஅரசியலமைப்பு பற்றிய அறிவு இடம்பெற்றுள்ளது.

11, 12-ம் வகுப்பு புத்தகங்களில் அரசியல் அறிவியல் (Political Science) புத்தகத்தில் இந்திய அரசியலமைப்பு பற்றிய தகவல்கள் உள்ளன.

இந்திய அரசியலமைப்பு பற்றிமுதல் நூலில் (Standard Books) தெளிவாக நாம் தெரிந்துகொள்ளலாம்.

வழி நூல்கள் (GUIDE)

லஷ்மிகாந்த் எழுதிய இந்திய அரசியல் (Indian Polity) புத்தகம் முக்கியமான வழி நூல் (Guide) ஆகும். இந்த வழி நூலை (Guide) பின்பற்றினால், அரசியலமைப்பு பற்றிய மொத்த பாடத்திட்டத்தை தெரிந்துகொள்ளலாம். பாடத்தில் உள்ள முக்கியமான குறிப்புகளை விவரிப்பது மட்டுமின்றி, நம் தேர்வுக்கு போதுமானதாகவும் இருக்கும்.

மேற்கோள் நூல்கள் (Refernce Books)

எங்கெல்லாம் நமக்கு சந்தேகம் ஏற்படுகிறதோ அங்கெல்லாம் நாம் அடிக்கடி பயன்படுத்துவது இந்திய அரசியலமைப்பு (Constitution of India) பற்றிய விவரங்களைத்தான். அதில் 395 விதிகள், 22 பகுதிகள், 12 அட்டவணைகள்/ இணைப்பு பட்டியல்கள் (Schedules) உள்ளன. இவை எல்லாமே அதில் அடங்கும். அதுமட்டுமல்லாமல் சட்டத் திருத்தங்களும் அடங்கும். இவை அனைத்தும் இந்திய அரசியலமைப்பு (Constitution of India) எனும் புத்தகத்தில் உள்ளது.

முக்கிய இணையதளங்கள்

இதுமட்டுமின்றி, www.parliamentofindia.nic.in, www.mpa.gov.in, www.rajyasabha.nic.in, www.loksabha.nic.in, www.india.gov.in, www.mha.gov.in, www.india.gov.in ஆகிய இணையதளங்களில் இந்த அடிப்படை பொது அறிவு தொடர்பான தகவல்களை பார்க்கலாம்.

யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் அரசியலமைப்பு தொடர்பான கேள்விகளை எப்படி கேட்கின்றனர் என பார்க்கலாம்.

கேள்விகளின் அடிப்படையில் 5 பிரிவுகளாக பிரித்து, அந்த 5 பிரிவுகள் எவை என்பதை கீழ்க்கண்டவாறு பார்க்கலாம்.

முதல் பிரிவு - இந்திய அரசியல மைப்பு வரலாறு/ உருவாக்கம் பகுதி I, II, III, IV IVஅ

இரண்டாவது பிரிவு - நாடாளுமன்றம் சட்டமன்றம்

மூன்றாவது பிரிவு - ஆட்சித் துறை

நான்காவது பிரிவு - நீதித் துறை

ஐந்தாவது பிரிவு - உள்ளாட்சி.

(அடுத்த பகுதி நாளை...)

முந்தைய பகுதி: போட்டித்தேர்வு தொடர் 06 - தகுதி நிலை - ஆளுமை அடையாளம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x