

சென்னை: தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்புக்களுக்கான பொதுத்தேர்வுகள் மே 5 முதல் 31-ம் தேதி வரை நடைபெற உள்ளன.
கரோனா பரவலால் ஏற்பட்ட தாமதத்தால் நடப்பு கல்வியாண்டில் (2021-22) 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டம் கணிசமாகக் குறைக்கப்பட்டது. அதன்படி,10-ம் வகுப்புக்கு 39 சதவீதம், 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு 35 சதவீதம் என்ற விகிதத்தில் பாடங்கள் குறைக்கப்பட்டன. இதனடிப்படையிலேயே தேர்வுகள் நடத்தப்படும்என்று பள்ளிக்கல்வித் துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது.
அதன்படி, குறைக்கப்பட்டது போக மீதமுள்ள பாடங்கள் மட்டுமே மாணவர்களுக்கு நடத்தப்பட்டன. இந்நிலையில், பொதுத்தேர்வு நெருங்கிவிட்ட சூழலில், எந்தெந்த பாடங்களைப் படிக்க வேண்டும் என்பதில் மாணவர்கள் மத்தியில் குழப்பம் நிலவுவதாக புகார்கள் எழுந்தன.
இது தொடர்பாக அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘‘பொதுத்தேர்வுக்கான வினாக்கள் பள்ளிக்கல்வித் துறையால் வழங்கப்பட்ட முன்னுரிமை பாடத் திட்டத்தின் அடிப்படையிலேயே கேட்கப்படும். அதாவது, குறைக்கப்பட்ட பாடத்தில் இருந்து மட்டுமே கேள்விகள் கேட்கப்படும். எனவே, அவற்றை மட்டுமே மாணவர்கள் முழுமையாகப் படிக்க வேண்டும்.