Published : 27 Apr 2022 06:51 AM
Last Updated : 27 Apr 2022 06:51 AM

தமிழகத்தில் 100 ஆண்டுகள் கடந்த பாரம்பரிய பள்ளிக் கட்டிடங்கள் ரூ.25 கோடியில் புதுப்பிக்கப்படும்

சென்னை: தமிழகத்தில் 100 ஆண்டுகள் கடந்த அரசுப் பள்ளிகள் மற்றும் தலைவர்கள், அறிஞர்கள் படித்த பள்ளிகளில் ரூ.25 கோடியில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குநர் (இடைநிலைக் கல்வி) கோபிதாஸ், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் 100 ஆண்டுகள்கடந்த அரசுப் பள்ளிகளில் நூற்றாண்டு விழாக்கள் கொண்டாடப்பட உள்ளன. இதற்காக அந்தப் பள்ளியில் உள்ள பாரம்பரிய, புராதனக் கட்டிடங்களை பழமைமாறாமல் புதுப்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுதவிர, பள்ளி வளாகத்தைச் சீரமைத்தல், வெள்ளை அடித்தல், மின்சாதனப் பொருட்களை பழுதுபார்த்தல் உள்ளிட்ட சீரமைப்புப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதேபோல, தமிழ் அறிஞர்கள், தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், விஞ்ஞானிகள் மற்றும் பல்துறை சாதனையாளர்கள் படித்த பள்ளிகளிலும் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

டிஜிட்டல் மயமாக்கப்படும்..

இந்தப் பள்ளி நூலகங்களில் உள்ள அரிய நூல்கள் மற்றும் தலைவர்கள் பற்றிய ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு பாதுகாக்கப்படும்.

எனவே, தங்கள் பகுதியில் 100 ஆண்டுகள் கடந்த அரசுப் பள்ளிகள் மற்றும் தலைவர்கள் படித்த பள்ளிகளின் விவரங்களை, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளும் இயக்குநரகத்துக்கு துரிதமாக அனுப்பிவைக்க வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளுக்காக தமிழக அரசு ரூ.25 கோடி நிதிஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x