Published : 23 Apr 2022 06:16 AM
Last Updated : 23 Apr 2022 06:16 AM

குரூப்-4 தேர்வு விண்ணப்பத்தில் இணைக்க தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழை பெற பள்ளிகளில் குவியும் தேர்வர்கள்

கோவை: குரூப் - 4 தேர்வுக்கான விண்ணப் பத்தில் இணைக்க, தாங்கள் படித்தபள்ளிகளில் தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் பெறுவதில் தேர்வர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில், பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்ப குரூப் - 4 தேர்வு, வரும் ஜூலை 24-ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க ஏப்ரல்28-ம் தேதி கடைசிநாள் என்பதால்,ஆயிரக்கணக்கானோர் விண்ணப் பித்து வருகின்றனர்.

மேலும், 10-ம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வியில் படித்திருந்தால், பணி நியமனத்தில் 20 சதவீதம் சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. எனவே, தமிழ்வழிக்கல்வியில் படித்த விண்ணப்பதாரர்கள், அதற்கான சான்றிதழை பெற தாங்கள் படித்த பள்ளிகளில் குவிந்து வருகின்றனர்.

இதுதொடர்பாக, கோவையைச் சேர்ந்த தேர்வர்கள் சிலர் கூறும்போது, ‘‘சிலர் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஒரே பள்ளியில் படித்திருப்பார்கள். சிலர் 5-ம் வகுப்பு வரை ஒரு பள்ளியிலும், 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை வேறு பள்ளியிலும் படித்திருப்பர். 5-ம் வகுப்பு வரையில்தமிழ்வழிக்கல்வியில் படித்ததற்கான சான்றை பெற குரூப் 4 விண்ணப்பம் மட்டும் போதும். ஆனால், 6முதல் 10-ம் வகுப்பு வரை தமிழ் வழிக்கல்வியில் படித்ததற்கான சான்றிதழை பெற, பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியலின் நகலை விண்ணப்பத்துடன் இணைத்து வழங்க வேண்டும். சில பள்ளிகளில் இந்த சான்றைஉடனடியாக அளித்து விடுகின்றனர். பல பள்ளிகளில் தாமதமாக அளிக்கின்றனர். தேர்வுக்கு விண்ணப்பிக்க குறுகிய கால அவகாசமே உள்ளதால் தேர்வர்கள் விண்ணப்பித்தால் அடுத்த சில மணிநேரங்களில் கிடைக்கும் வகையில் பள்ளி நிர்வாகத்தினர் சான்றிதழை அளித்தால் பயன் உள்ளதாக இருக்கும்’’ என்றனர்.

பள்ளி நிர்வாகிகள் சிலர் கூறும்போது, ‘‘உரிய விண்ணப்பத்துடன் மாணவர்கள் விண்ணப்பித்தால், ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு அவர்களுக்கு மறுநாளே தமிழ்வழிக்கல்வியில் படித்ததற்கான சான்றிதழ் வழங்கப்படுகிறது’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x