விருதுநகர் | காஃபி வித் கலெக்டர் நிகழ்ச்சியில் 20 மாணவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு

விருதுநகர் | காஃபி வித் கலெக்டர் நிகழ்ச்சியில் 20 மாணவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு
Updated on
3 min read

விருதுநகர்: வாழ்க்கையில் முன்னேற எளிய வழி கல்வி ஒன்றுதான் என்ற பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடிய மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி கூறினார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தில் 20 அரசுப் பள்ளிகளில் பயின்று வரும் தனித்திறமை வாய்ந்த 20 பள்ளி மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும், அவர்களின் திறமைகளை பாராட்டும் விதமாகவும் 'Coffee with Collector' நிகழ்ச்சி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று காலை நடைபெற்றது.

இதில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 ஒன்றியங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் கல்வி, பொதுஅறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி நேரில் அழைத்து கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, இன்று 12-வது முறையாக அரசு பள்ளி மாணவ, மாணவியர்களிடம் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர் கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்ற பல்வேறு காரணங்கள் வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு இந்த காரணங்கள் ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால் நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம்.

இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அரசு பள்ளி மாணவ, மாணவிகளிடம் அவர்களுடைய லட்சியம், எந்த துறையில் ஆர்வம், அவர்களுக்கு பிடித்த விளையாட்டு, வீரர்கள், அவர்களுடைய பொழுதுபோக்கு உள்ளிட்டவை குறித்து மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார். மாணவர்களும் தங்களுக்கு ஐஏஎஸ், ஐபிஎஸ், மருத்துவம், வழக்கறிஞர், விஞ்ஞானி, விவசாயம், வானவியல், பட்டய கணக்காளர் (சிஏ), பேராசிரியர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் படிப்பதற்கு விருப்பம் இருப்பதாக தெரிவித்தனர்.

மாவட்ட ஆட்சியர் பேசுகையில், "இப்பொழுது உள்ள சூழ்நிலையில் உங்கள் பெற்றோர்களை காட்டிலும் உங்களுக்கு வாழ்க்கையில் படிப்பதற்கும், உங்கள் இலக்கு, ஆசை, லட்சியத்தை அடைவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. அந்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். உங்கள் லட்சியத்தை அடைவதற்கு பின்புலம் அவசியமில்லை. வாழ்க்கையில் முன்னேற எளிய வழி கல்வி ஒன்றே. எனவே, வாழ்க்கையில் தன்னம்பிக்கை மற்றும் தைரியத்துடன் கடினமாக உழைத்தால் வாழ்வில் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம்.

வாழ்க்கையில் தோல்வி என்ற ஒன்றை சந்திக்காமல் சாதித்த மனிதரே இருக்க முடியாது. எனவே வாழ்வில் தோல்வியோ, கஷ்டமோ வரும் போது அதிலிருந்து பாடங்களை கற்றுக்கொண்டு தொடரந்து முன்னேறி கொண்டே இருக்க வேண்டும். நேரத்தை நல்வழியில் செலவிடவேண்டும். நீங்கள் பள்ளி பயிலும் போதே அனைத்து பல்வேறு போட்டிகளில் பங்கேற்று திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

எல்லோருக்கும் ஒரு தனித்திறனை இருக்கும். அந்த திறமையை கண்டறிந்து தங்களை மெருகேற்றி கொள்ள வேண்டும். உங்கள் வாழ்க்கையில் உங்களால் முடியாது, சாதிக்க முடியாது என்று யார் என்ன சொன்னாலும், நீங்கள் அதை நம்பி விடாமல், உங்கள் இலக்கை நோக்கி சென்று கொண்டே இருக்க வேண்டும். மேலும், நீங்கள் உங்களுக்கென்று தனித்திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும். இது உங்களை முழுமைபடுத்தும் என்றும், இந்த திறமைகளை கொண்டு பல நபர்களுக்கு உதவ முடியும்" என்று கூறினார்.

மேலும் "உங்கள் படிப்பு சமுதாயத்திற்கு பயன்பட வேண்டும்.இதைவிட மிக முக்கியாமானது, நீங்கள் நன்றாக படித்து, ஒரு நல்ல நிலைக்கு வந்த பிறகு, எப்பொழுதும் உங்கள் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். நீங்களும் மகிழ்ச்சியாக இருந்து, உங்களை சுற்றி உள்ளவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும். இது உங்களுடைய வேலையில் நன்றாக பார்பதற்கும், முன்னேறுவதற்கும் உதவியாக இருக்கும். அடுத்து வாழ்க்கையில் உங்களால் முடிந்த அளவு மற்றவர்களுக்கு உதவ வேண்டும்" என்றார்.

அதோடு, மாணவர்கள் இந்திய குடிமையியல் பணி, இந்திய காவல் பணி, மருத்துவப் பணி உள்ளிட்ட பல்வேறு அரசு பணிகளில் சாதிப்பதற்கு பல்வேறு அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார். இறுதியாக மாணவர்கள் அனைவருக்கும் அவர்களுடைய லட்சியத்தை அடைவதற்கு உரிய வழிகாட்டுதல் மற்றும் அறிவுரைகளை வழங்கி வாழ்த்துகளையும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

பின்னர் மாணவர்களுடன் கலந்துரையாடி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 20 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு "இந்து தமிழ் திசை இயர் புக்" பொது அறிவு மற்றும் அகராதி புத்தகங்களை மாவட்ட ஆட்சியர் ஜெ. மேகநாதரெட்டி பரிசாக வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞான கௌரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in