அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு தனியாக ஆசிரியர்களை நியமிக்க வலியுறுத்தல்

கொள்ளிடத்தில் நேற்று நடைபெற்ற ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்களுக்கான பாராட்டு விழாவில் பங்கேற்ற சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம், தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் தாஸ் உள்ளிட்டோர்.
கொள்ளிடத்தில் நேற்று நடைபெற்ற ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்களுக்கான பாராட்டு விழாவில் பங்கேற்ற சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம், தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் தாஸ் உள்ளிட்டோர்.
Updated on
1 min read

மயிலாடுதுறை: அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு தனியாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் தாஸ் வலியுறுத்தி உள்ளார்.

ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, நல்லாசிரியர்களுக்கு பாராட்டு விழா மற்றும் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் நேற்று நடைபெற்றது.

விழாவுக்கு, ஒன்றியத் தலைவர் சிங்காரவேலு தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் சங்கர் வரவேற்றார். ஒன்றியக் குழு துணைத் தலைவர் பானுசேகர், மாநில துணை பொதுச் செயலாளர் கமலநாதன், மாவட்டச் செயலாளர் சண்முகசுந்தரம், மாவட்ட மகளிரணி செயலாளர் கலைச்செல்வி, ஒன்றிய மகளிரணி செயலாளர் சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் பங்கேற்று, சாதனை படைத்த ஆசிரியர்களுக்கு விருதுகள் மற்றும் கேடயங்களை வழங்கினார். தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் தாஸ் சிறப்புரையாற்றினார்.

கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் தாஸ் கூறியது:

சென்னை பகுதியில் பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்குவதைப் போல, கிராமப்புற பள்ளிகளில் உள்ள ஏழை மாணவர்களுக்கும் காலை சிற்றுண்டி வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் ஏப்ரல் இறுதிக்குள் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும். ஆசிரியர்களின் நீண்ட கால கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை முதல்வர் அறிவிக்க வேண்டும்.

பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் தொடக்கக் கல்வித் துறையை தனித்து இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமங்களில் ஆசிரியர்கள் மீதான பாலியல் குற்றங்கள் மீது தீவிர விசாரணைக்குப் பிறகே நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளிலிருந்து 5 லட்சம் மாணவர்கள் விலகி வந்து அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். இதற்கு கரோனா தொற்று சூழல் காரணம் என்று கூறுவது தவறு. அரசுப் பள்ளிகளில் கணினி, நூலகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் சிறப்பாக இருப்பதாலேயே இந்த சேர்க்கை நிகழ்ந்துள்ளது. அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி பயின்று வரும் மாணவர்களுக்கு தனியாக ஆசிரியர்கள் நியமனம் செய்ய வேண்டும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in