

யுனெஸ்கோ நல்லெண்ண முன்னாள் தூதர் மதன்ஜீத் சிங் குறித்த நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி இணையவழியில் நடைபெற்றது.
தெற்காசிய கூட்டமைப்பு மற்றும் ஏசியன் காலேஜ் ஆப் ஜர்னலிசம் சார்பில் யுனெஸ்கோ நல்லெண்ண முன்னாள் தூதர் மதன்ஜீத் சிங் குறித்த நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி ‘தெற்காசிய கலைகளில் பாகிஸ்தானின் பங்களிப்பு’ என்ற தலைப்பில் இணையவழியில் நேற்று நடைபெற்றது. இதில் ஏசியன் காலேஜ் ஆப் ஜர்னலிசம் கல்வி மையத்தின் தலைவர் சசி குமார் வரவேற்புரை ஆற்றினார்.
அதன்பின்னர் ‘இந்து’ என்.ராம் சொற்பொழிவை தொடங்கி வைத்து பேசும்போது, ‘‘தெற்காசிய நாடுகள் இடையே நட்புறவு வளர்வதற்காக மதன்ஜீத் சிங் பல்வேறு ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை மேற்கொண்டவர். அவர் உருவாக்கிய கூட்டமைப்பு மூலம் தற்போது சார்க் நாடுகளைச் சேர்ந்த இளம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உட்பட பல்வேறு பலன்கள் வழங்கப்பட்டு வருகின்றன’’ என்று தெரிவித்தார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல வரலாற்று அறிஞரும், கலை நிபுணருமான எப்.எஸ்.அய்ஜாசுதீன் ‘மதன்ஜீத் சிங்' நினைவு சொற்பொழிவாற்றினார். மேலும்,பாகிஸ்தானில் உள்ள புராதனமிக்க பொருட்கள், படங்கள் குறித்த தகவல்களை பகிர்ந்துக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து அய்ஜாசுதீன் பேசியதாவது: பாகிஸ்தானில் உள்ள புராதன, பழமையான நினைவுச் சின்னங்கள் தெற்காசிய பாரம்பரியத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. புவியியல் ரீதியாக வேறுபட்டு இருந்தாலும் கலாச்சார ரீதியாக நாம் அனைவரும் ஒன்றிணைகிறோம். அந்தவகையில் மதன்ஜீத் சிங் செயல்படுத்திய தொலைநோக்குப் பார்வை கொண்ட திட்டங்களால், பிராந்திய நாடுகள் மத்தியில் அமைதியும், வளர்ச்சியும் ஏற்பட்டுள்ளது’’ என்றார்.
இந்த நிகழ்வில் தெற்காசிய கூட்டமைப்பின் இந்தியாவுக்கான தலைவர் மணிசங்கர் அய்யர், மதன்ஜீத் சிங் கூட்டமைப்பின் அறங்காவலர் பிரான்ஸ் மர்கீத், ஏசியன் காலேஜ் ஆப் ஜர்னலிசம் மையத்தின் முதல்வர் நளினி ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.