படிப்பை முடித்தவுடன் 6 மாதங்களுக்குள் பட்டத்தை வழங்க வேண்டும் - கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்

படிப்பை முடித்தவுடன் 6 மாதங்களுக்குள் பட்டத்தை வழங்க வேண்டும் - கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: மாணவர்கள் படிப்பை முடித்த 6 மாதங்களுக்குள் பட்டத்தை வழங்க வேண்டும் என்று அனைத்து கல்வி நிறுவனங்களையும் யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

பட்டப் படிப்பை முடித்த மாணவர்களுக்கு உரிய சான்றிதழ்களை வழங்காமல் பல பல்கலைக்கழகங்கள் தாமதம் செய்கின்றன. மாணவர்களுக்கு வழங்கப்படும் தற்காலிக சான்றிதழும் 6 மாதங்கள் மட்டுமே செல்லுபடியாகும் என்பதால், உயர்கல்வி, வேலைவாய்ப்பில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இதைக் கருத்தில் கொண்டு, உரிய வழிகாட்டுதலை பின்பற்றுமாறு அனைத்து கல்வி நிறுவனங்களையும் யுஜிசி மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், கல்லூரி முதல்வர்களுக்கு யுஜிசி செயலர் ரஜனிஷ் ஜெயின் அனுப்பிய சுற்றறிக்கை:

உயர்கல்வி நிறுவனங்களில் பல்வேறு படிப்புகளுக்கான பட்டங்கள் வழங்கப்படுவதில் தாமதம் ஏற்படுவதாக யுஜிசிக்கு பல புகார்கள் வருகின்றன. பல்கலைக்கழகப் பட்டம், மதிப்பெண் சான்றிதழ், பிற சான்றுகளை வழங்குவதில் தாமதம் செய்வதால், மாணவர்களின் உயர்கல்வி, வேலைவாய்ப்பு பாதிக்கப்படுகிறது. இதை யுஜிசி தீவிர பிரச்சினையாக கருதுகிறது.

இதுதொடர்பாக ஏற்கெனவே கடந்த 2016-ம் ஆண்டில் நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. ஒரு படிப்பை வெற்றிகரமாக முடித்தபிறகு அதற்குரிய பட்டத்தை பெறுவது மாணவரின் உரிமை. எனவே,கல்லூரி முடித்த 180 நாட்களுக்குள் மாணவர்களுக்கு அதற்குரிய பட்டத்தை வழங்க வேண்டும். இதுகுறித்த வழிகாட்டு நெறிமுறைகள் யுஜிசி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அதை கட்டாயம் பின்பற்றி, உரிய காலத்துக்குள் பட்டங்களை வழங்குமாறு அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தப்படுகின்றன. இந்த விதிகளை பின்பற்றாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

தேவைப்படும் மாணவர்களுக்கு தற்காலிக சான்றிதழ் வழங்குமாறும் அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in