

சென்னை: தமிழகத்தில் 10, 11, 12-ம்வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மே மாதம் நடைபெறவுள்ளது. இதற்கு மாணவர்களைத் தயார்படுத்தும் விதமாக திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி 3-ம் கட்டதிருப்புதல் தேர்வு அடுத்த வாரம்தொடங்கவுள்ளது. இதற்கானமுன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பள்ளி அளவிலேயே திருப்புதல் தேர்வை நடத்திக் கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிநிறுவனம் (எஸ்சிஇஆர்டி) சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
நடப்பு கல்வியாண்டில் (2021-22) 10, 12-ம் வகுப்புகளுக்கான முதல் மற்றும் 2-ம் திருப்புதல்தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பாடப்பகுதிகளுக்கான 3-ம் கட்ட திருப்புதல் தேர்வை பள்ளிகள் அளவிலேயே நடத்திக் கொள்ளலாம். இதற்கான வினாத்தாள்களை சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்களைக் கொண்டு தயாரித்துக் கொள்ள வேண்டும்.
மேலும், 11-ம் வகுப்புக்கான திருப்புதல் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்வு முடிந்த பின்னர் மீதமுள்ள பாடப்பகுதிகளுக்கான 2-ம் கட்டதிருப்புதல் தேர்வை மேற்கூறியவாறு பள்ளிகள் அளவிலேயே நடத்திக் கொள்ளலாம்.
இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, மாவட்ட முதன்மைக்கல்வி உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.