Published : 07 Apr 2022 05:53 AM
Last Updated : 07 Apr 2022 05:53 AM

ஏவுகலன் அறிவியல் ஆன்லைன் பயிற்சியில் திறனை வெளிப்படுத்திய அரசுப் பள்ளி மாணவrகள் விரைவில் ரஷ்யா பயணம்: பத்மபூஷன் சிவதாணு பிள்ளை பெருமிதம்

ஏவுகலன் அறிவியல் குறித்த ஆன்லைன் பயிற்சியில் சான்றிதழ் பெற்ற மாணவ, மாணவியருடன் விஞ்ஞானி சிவதாணு பிள்ளை உள்ளிட்டோர்.

சென்னை: ஏவுகலன் அறிவியல் குறித்த ஆன்லைன் பயிற்சியில் சிறப்பான திறனை வெளிப்படுத்திய அரசுப் பள்ளி மாணவ - மாணவிகள் ரஷ்யாவுக்குச் செல்லவுள்ளனர் என்று பத்மபூஷன் சிவதாணு பிள்ளை பெருமிதத்துடன் தெரிவித்தார்.

73-வது இந்திய குடியரசு நாளையொட்டி கடந்த ஜன.26 அன்றுதமிழக அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு முதல்முறையாக ஏவுகலன் அறிவியல் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யும் நோக்கில் ஆன்லைன் பயிற்சி தொடங்கியது. இந்தப் பயிற்சியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

ஜன.29 முதல் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 15 ஆன்லைன் தொடர் பயிற்சிகளாக நடைபெற்றன. இதில், பிரம்மோஸ் ஏரோபேஸ் நிறுவனத்தின் தலைவரும் ஏவுகணை விஞ்ஞானியுமான பத்மபூஷன் ஏ.சிவதாணு பிள்ளைபங்கேற்று, ஏவுகலன் தொழில்நுட்பம் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளித்தார்.

இந்தப் பயிற்சியில், சிறப்பானமுறையில் திறனை வெளிப்படுத்திய மாணவ-மாணவிகளுக்கான பாராட்டு விழா, சென்னை அண்ணாபல்கலைக்கழக விவேகானந்தா அரங்கில் ஏப்.2-ம் தேதி நடந்தது.

மாணவர்களுக்குப் பாராட்டுச்சான்றிதழ்களை வழங்கி ஏ.சிவதாணு பிள்ளை பேசியதாவது: இந்தப் பயிற்சியில் அரசுப்பள்ளி மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடனும் ஈடுபாட்டுடனும் பங்கெடுத்தனர். மாணவர்களிடம் அண்டம், செயற்கைக்கோள்கள் - பயன்பாடுகள், ஏவுகலன் பரிணாம வளர்ச்சி, நியூட்டன் விதிகள், உலக நாடுகளின் ராக்கெட்கள், ராக்கெட் உந்திகள், ராக்கெட் வடிவமைப்பு ஆகியன குறித்து உரையாடியது மிகுந்த மனநிறைவைத் தந்தது. மாணவர்களும் அவர்களது சந்தேகங்களை என்னிடம் கேட்டனர்.

இந்தப் பயிற்சியில் சிறந்தமுறையில் திறனை வெளிப்படுத்திய அரசுப் பள்ளி மாணவ - மாணவிகள் ரஷ்யாவுக்குச் செல்லவுள்ளனர் என்பது பெருமகிழ்ச்சிஅளிக்கிறது. ஏவுகலன் தொழில்நுட்பத்தை மாணவர்கள் ஆர்வத்துடன் அறிந்துகொண்டதோடு, வருங்காலத்தில் ஏவுகலன் தொழில்நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவார்கள் என்கிற நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்வில், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ், பள்ளிக் கல்வி ஆணையர் கே.நந்தகுமார், ஐஏஎஸ், இந்தோ ரஷ்யன் சேம்பர் ஆஃப் காமர்ஸ் பொதுச்செயலாளர் பி.தங்கப்பன், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் விற்பனைப் பிரிவு பொதுமேலாளர் டி.ராஜ்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x