டெல்லியை போல மாதிரி பள்ளி தொடங்க அரசு திட்டம்: பல்லாவரத்தில் ஏப்ரல் 9-ல் முதல்வர் ஆய்வு செய்கிறார்

மாதிரி பள்ளியாக மாற்றுவதற்காக முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்யவுள்ள பல்லாவரம், மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. படங்கள்: எம்.முத்துகணேஷ்
மாதிரி பள்ளியாக மாற்றுவதற்காக முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்யவுள்ள பல்லாவரம், மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. படங்கள்: எம்.முத்துகணேஷ்
Updated on
1 min read

பல்லாவரம்: டெல்லியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கு டெல்லி, வினோத் நகரில் உள்ள அரசு மாதிரி பள்ளியைப் பார்வையிட்டார். பின்னர் `இதைப்போல் ஒரு பள்ளியைத் தமிழகத்தில் விரைவில் நாங்கள் உருவாக்கப் போகிறோம்' என முதல்வர் தெரிவித்தார்.

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரத்தில் உள்ள மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாதிரி பள்ளி அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் வரும் 9-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்.

இதுகுறித்து கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பல்லாவரம் மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் 873 மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு தமிழ், ஆங்கில வழியில் கல்வி கற்பிக்கப்படுகிறது. இப்பள்ளி, சமீபகாலமாக, தனியார் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாற்றப்பட்டு வருகிறது.

இங்கு மாணவர்களின் அறிவியல் அறிவை தூண்டும் விதமாக, ரூ.25 லட்சம் செலவில், அரசுப் பள்ளிகளிலேயே முதல்முறையாக இளம் கலாம் அறிவியல் ஆய்வு மையம்’ அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை மற்ற பகுதி அரசுப் பள்ளி மாணவர்கள் பார்வையிட்டுச் செல்கின்றனர். அதேபோல், ரூ.6 லட்சம் செலவில் 3 ஸ்மார்ட் வகுப்பறைகள், உயர் தொழில்நுட்ப ஆய்வகம் போன்ற வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

மேலும், தனியார் பங்களிப்புடன் தற்போது ரூ.1.5 கோடி செலவில், கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டு பள்ளியை மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இதனால் வரும் 9-ம் தேதி, இப்பள்ளியை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்ய இருக்கிறார். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in