

மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கான சியுஇடி பொது நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு நேற்று தொடங்கியது.
நாடு முழுவதும் உள்ள மத்தியபல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலைப் படிப்புகளில் சேருவதற்கான பொது நுழைவுத்தேர்வை (சியுஇடி) மத்திய கல்வி அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. இந்த தேர்வு முறை 2022-23-ம் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து தேசிய தேர்வுமுகமை (என்டிஏ) வெளியிட்ட அறிவிப்பில், ‘‘மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலைப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு (சியுஇடி) தமிழ், இந்தி, கன்னடம் உட்பட 13 மொழிகளில் கணினிவழியில் நடத்தப்பட உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு தொடங்கி உள்ளது.
இதில் பங்கேற்ற விருப்பம் உள்ளவர்கள் https://cuet.samarth.ac.in/ என்ற இணையதளத்தில் ஏப்.30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை https://nta.ac.in/ என்ற இணையதளத்தில் அறியலாம். இதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-40759000 / 69227700 ஆகிய எண்கள் அல்லது cuet-ug@nta.ac.in என்ற மின்னஞ்சல் வழியாகதொடர்பு கொண்டு, விளக்கம் பெறலாம்’’ என்று தெரிவிக்கப்பட்டுள் ளது.
இதற்கிடையே, தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் நடத்தப்படும் இந்த சியுஇடி தேர்வுக்கு, தமிழக அரசு எதிர்ப்புத் தெரிவித்துள்ளதுடன், அறிவிப்பை திரும்பப் பெற வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளது குறிப் பிடத்தக்கது.