

பொறியியல் படிப்புகளில் சேர கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்கள் கட்டாயம் இல்லை என்ற ஏஐசிடிஇ அறிவிப்புக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமம் (ஏஐசிடிஇ), 2022-23 கல்வி ஆண்டுக்கான அங்கீகார வழங்கலுக்கான வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில், பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு பிளஸ் 2வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்கள் கட்டாயம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை வரும் கல்வி ஆண்டு (2022-23) முதல் அமலுக்கு வருகிறது. ‘கல்லூரிகளில் முதல் 2 பருவங்கள் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களின் அடிப்படை, பிரிட்ஜ் கோர்ஸ் முறையில் கற்று தரப்படும். எனவே, மாணவர்களுக்கு சிரமம் இருக்காது. இதன்மூலம் பொறியியல் படிப்பில் சேர அதிக மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்’ என்று ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது.
ஆனால், இந்த அறிவிப்பால் கல்வியின் தரம் பாதிக்கப்படும் என்று கல்வியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியுள்ளதாவது:
டி.நெடுஞ்செழியன்: அனைத்து பொறியியல் பாடங்களுக்கும் அடிப்படையானது கணிதம். அதை 6 மாத பயிற்சியில் மாணவர்களுக்கு வழங்கிட முடியாது. இதனால்கல்லூரிகளால் திறமையான பொறியாளர்களை உருவாக்க முடியாத நிலை ஏற்படும்.
ஏற்கெனவே இந்திய பொறியாளர்கள் போதுமான தகுதிகளுடன் இருப்பதில்லை. அதனால் இந்திய இளநிலை பொறியியல் படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கக் கூடாது என்று ‘வாஷிங்டன் அக்கார்டு’ என்ற இளநிலை பொறியியல் படிப்புக்கான சர்வதேச தர அமைப்பு குற்றம்சாட்டி வருகிறது.
தவிர பொறியியல் கல்வியில் சிறந்து விளங்கும் நாடுகளின் பாடத்திட்டத்தில் கணிதம்தான் முக்கிய அம்சமாக உள்ளது. இந்தியாவிலும் ஐஐடி, என்ஐடிகளின் பாடத்திட்டத்திலும் கணிதமே அதிகம் இடம்பெறுகிறது. இந்நிலையில், இத்தகைய முன்னெடுப்புகள் தகுதிபெற்ற பட்டதாரிகளை உருவாக்குவதற்கு பதிலாக வெறுமனே வேலை செய்யக்கூடிய பணியாளர்களை மட்டுமே தயாரித்து வழங்கும். வெளிநாடுகளில் உயர்கல்வி, வேலைவாய்ப்பு மேற்கொள்வதிலும் சிக்கல் எழும்.
ஜெயப்பிரகாஷ் காந்தி: தேசிய கல்விக் கொள்கை 2020-ன் அடிப்படையில் இந்த நடைமுறையை ஏஐசிடிஇ கொண்டுவந்துள்ளது. பொறியியல் படிக்க கணிதம் அவசியம் இல்லை என்றால் ஜேஇஇ, கேட் நுழைவுத் தேர்வில் கணித கேள்விகளை மாணவர்கள் எவ்வாறு எழுத முடியும். அதேபோல, உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லேர்னிங் ஆகிய பாடங்களை அனைத்து பொறியியல் பிரிவுகளிலும் சேர்ப்பதற்கு பரிந்துரை செய்துள்ளன. கணித அறிவின்றி அந்த பாடங்களை மாணவர்களால் படிக்க முடியாது. எனவே, ஏஐசிடிஇ தனது அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்.